India
ஜார்க்கண்டில் நாளை முதற்கட்ட சட்டமன்றத் தேர்தல்... மகாராஷ்டிரா அரசியல் விவகாரம் எதிரொலிக்குமா?
மகாராஷ்டிராவில் குழப்பங்களுக்கிடையே ஒரு மாதத்திற்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமைந்திருக்கும் நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நாளை தொடங்க இருக்கிறது. ஐந்து கட்டங்களாக நடைபெறும் தேர்தல் நாளை தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 23ம் தேதி வெளியாக இருக்கிறது.
81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்டில், முதற்கட்டமான 13 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 3 வரை மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 189 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 174 ஆண் வேட்பாளர்கள் 15 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2000ம் ஆண்டு பீகார் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டது ஜார்க்கண்ட். தேசியக் கட்சிகள் தாண்டி மாநிலக் கட்சிகள் தங்களுக்கென தனி வாக்கு வங்கியை வைத்திருக்கின்றன. தற்போதைய தேர்தலில் மாநில கட்சியான சிபுசோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தள் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகிறார்கள்.
இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் உள்ள பா.ஜ.க தனித்துக் களம் காண்கிறது. கடந்த முறை கூட்டணியிலிருந்த ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் தனித்து போட்டியிடுகிறது. தற்போது மத்திய அமைச்சரவையில் உள்ள ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜகசக்தி, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா, அசாதுதீன் ஓவைசியின் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.
முதற்கட்ட தேர்தல் நடைபெறவிருக்கும் 13 தொகுதிகளில் பா.ஜ.க 12 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. ஒரு தொகுதியில் சுயேட்சை வேட்பாளரை ஆதரிக்கிறது. காங்கிரஸ் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியில் காங்கிரஸ் 6 இடங்களிலும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா நான்கு இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதா தள் 3 இடங்களிலும் போட்டியிடுகிறது.
பா.ஜ.கவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த சரயு ராய்க்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் பா.ஜ.க முதல்வர் ரகுபர் தாஸ்ஸை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். இவர் கடந்த காலங்களில் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோரின் ஊழலை வெளிக்கொண்டு வந்ததில் முக்கியப் பங்குடையவர் ஆவார்.
2014 சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க - ஜார்க்கண்ட் மாணவர்கள் முன்னணி 42 இடங்களில் வெற்றி பெற்று பா.ஜ.க தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் - ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 25 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக அமர்ந்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க 12 இடங்களிலும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 2 இடங்களிலும் வெற்றி பெற்றது குறிபிடத்தக்கது.
பா.ஜ.க தரப்பை பொறுத்தவரை, “5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்திருக்கிறோம். ஊழலற்ற மாநிலமாக மாற்றி இருக்கிறோம். மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்தி இருக்கிறோம்” என்கிறது. காங்கிரஸ் கூட்டணியோ "பா.ஜ.க மாநிலம் முழுவதும் 13,000 பள்ளிகளை மூடி இருக்கிறது; கல்வி உதவித் தொகைகளை நிறுத்தி இருக்கிறது; வேலைவாய்ப்பை உருவாக்கத் தவறி இருக்கிறது. மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதாக மக்களைக் கொன்று வருகிறது” என்று பிரச்சாரம் செய்து வருகிறது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு, எஸ்டி பிரிவினருக்கு 28% இடஒதுக்கீடு, எஸ்சி பிரிவினருக்கு 12% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறியுள்ளது. அரசு வேலைகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு என்றும், தனியார் வேலைகளில் 75% ஜார்கண்ட் மக்களுக்கு வழங்கப்படும் என்றும் வாக்குறுதி வழங்கி இருக்கிறது.
பா.ஜ.க 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 2,200 ரூபாயும் ,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 7,500 ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படும். மலைவாழ் பெண்களுக்கு சுய தொழில் செய்ய 5 லட்சம் கடன், வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.
மகாராஷ்டிராவில் பா.ஜ.க சரிவைச் சந்தித்துள்ள நிலையில், அது ஜார்க்கண்ட் தேர்தலில் எதிரொலிக்கும் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது எந்தளவுக்கு உண்மை என்பது தேர்தல் முடிவுகள் வெளிவரும்போது தெரியவரும்.
- சி.ஜீவா பாரதி
Also Read
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!
-
நாகூர் சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள்! : நேரில் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!