India

"ஈழத் தமிழர்களின் துயரத்தை எடுத்துரைக்கவே இந்தக் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்” - வைகோ விளக்கம்!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் வருகையை கண்டித்து டெல்லியில் ம.தி.மு.க-வினருடன் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், எதற்காக இந்தக் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ விளக்கமளித்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, “இலங்கை குடியரசுத் தலைவர் கோத்தபய ராஜபக்சே, முன்பு பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றவாளி ஆவார்.

அப்போது அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே குடியரசுத் தலைவராக இருந்தார். அவர்தான் இனப்படுகொலைக்கு உத்தரவு பிறப்பித்தார்.

2014ம் ஆண்டு நரேந்திர மோடி, இந்தியப் பிரதமராகப் பதவி ஏற்ற விழாவிற்கு, மகிந்த ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.

அதை எதிர்த்து நாங்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இதே நாடாளுமன்ற வீதியில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானோம்.

ஈழத்தமிழர் படுகொலை குறித்துத் துளி அளவும் கவலையின்றி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்குச் சென்று கோத்தபய ராஜபக்சேவை, இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்து இருக்கின்றார்.

இது ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களில் எரிகின்ற தீயில், மேலும் பெட்ரோல் ஊற்றுகின்ற செயல் ஆகும்.

ஐ.நா. மன்றம் அளித்துள்ள ஆய்வு அறிக்கையின்படி, 2009-ம் ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்னர்.

எங்களுடைய தாய்மார்களும் சகோதரிகளும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. மருத்துவமனைகள் மீது இலங்கை வான்படை குண்டுகளை வீசியது; தரைப்படை பீரங்கித் தாக்குதல் நடத்தியது. படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தவர்கள் கொல்லப்பட்டார்கள். பள்ளிக் கட்டடங்களை இடித்துத் தகர்த்தார்கள்.

அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தலில், ஈழத் தமிழர்கள் சஜித் பிரேமதாஸாவுக்கு ஆதரவாக வாக்களித்து இருக்கின்றனர். எனவே, நான் சிங்கள மக்களின் ஆதரவால்தான் வெற்றி பெற்றேன் என்று கோத்தபய ராஜபக்சே அறிவித்தார்.

பதவி ஏற்றவுடன் முதல் வேலையாக அவர் பிறப்பித்த உத்தரவில், ஈழத் தமிழர்கள் வசிக்கின்ற தெருக்களில் இலங்கை இராணுவம் துப்பாக்கி ஏந்தி வலம் வர வேண்டும் என அறிவித்து இருக்கின்றார்.

ஏற்கனவே ஈழத் தமிழர்கள் வசிக்கின்ற பகுதிகள், சிங்கள ராணுவத்தின் சித்திரவதைக் கூடமாக, கொலைக்களமாக ஆக்கப்பட்டு இருக்கின்றது.

2008ம் ஆண்டு, சண்டேலீடர் என்ற ஆங்கில ஏட்டின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டதை அனைவரும் அறிவர்.

தான் இறப்பதற்கு முன்பு அவர் எழுதிய தலையங்கத்தில், மஹிந்த ராஜபக்சேவால் நான் கொல்லப்படுவேன் என்று எழுதி இருந்தார்.

கோத்தபய ராஜபக்சே நிகழ்த்திய படுகொலைகள் குறித்து விசாரிப்பதற்காக நிசாந்த சில்வா என்ற அதிகாரி நியமிக்கப்பட்டு இருந்தார்.

அவர் அந்தப் பொறுப்பில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். எனவே அவர் காவல்துறை ஆணையத்தையும் நீதிமன்றத்தையும் அணுகி அதே பொறுப்பில் நீடித்தார்.

கோத்தபய ராஜபக்சே குடியரசுத் தலைவராக பொறுப்பு ஏற்ற பிறகு, நிசாந்த சில்வா அவரது மனைவி மூன்று பெண் பிள்ளைகள் இலங்கையை விட்டு வெளியேறி விட்டனர். இப்போது அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை.

இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டுத் தூதரகத்தின் ஒரு பெண் அதிகாரி, கோத்தபய ராஜபக்சேவின் வெள்ளை வேன் குண்டர்களால் கடத்தப்பட்டு இருக்கின்றார்.

ஈழத்தமிழர்கள் இனப் இனப்படுகொலையின்போது இந்த வெள்ளை வேன் ஒரு கொலைக்கருவியாகச் செயல்பட்டது. அந்தப் பெண் அதிகாரி எங்கோ ஓரிடத்தில் விசாரிக்கப்படுவதாக நியூயார்க் டைம்ஸ் ஏடு எழுதி இருக்கின்றது.

உலகப் புகழ்பெற்ற ராய்ட்டர் செய்தி நிறுவனம், தங்களுடைய செய்தியாளர்களை இலங்கையில் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டது.

கோத்தபய ராஜபக்சேவின் மிரட்டலால், தினப்புயல் தமிழர் தளம் ஆகிய இரண்டு தமிழ் ஏடுகள் நிறுத்தப்பட்டுவிட்டன.

லைட் ஹவுஸ் என்ற, சிங்கள, ஆங்கிலம், தமிழ் செய்தித்தாள்களை வெளியிடுகின்ற, இலங்கையின் பெரிய செய்தி நிறுவனம், தமிழ் செய்தித்தாள்களை நிறுத்துவதாக அறிவித்து விட்டது. இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றார்கள். கடந்த 30 ஆண்டுகளில் 580 தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள். அவர்களுடைய படகுகளைப் பறிமுதல் செய்து, பிடிபட்ட மீனவர்களை இலங்கைச் சிறைகளில் அடைத்துள்ளனர்.

ஆனால், இலங்கை அரசாங்கத்தோடு நரேந்திர மோடி அரசு கொஞ்சிக் குலாவுகின்றது. இது தமிழர்களுக்கு எதிரான அநீதி ஆகும்.

இப்போது இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள் மிரட்டலுக்கும் அச்சத்திற்கும் வேதனைக்கும் ஆளாகி இருக்கின்றனர்.

அவர்களுடைய துயரத்தை உலகுக்கு எடுத்து உரைக்கவும், கொடியவன் கோத்தபய ராஜபக்சேவை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்த இந்திய அரசாங்கத்தைக் கண்டிக்கவும் நாங்கள் இந்தக் கறுப்புக்கொடி அறப்போர் ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றோம்.

எங்களுடைய முதன்மையான கோரிக்கை: ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றவாளிகளை, பன்னாட்டு நீதிமன்றத்தின் குற்றக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும்.

90,000 ஈழத் தமிழ்ப் பெண்கள் இப்போது விதவைகளாகக் கண்ணீர் சிந்துகின்றனர். காணாமல்போன பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை.

எனவே ஐ.நா.மன்றம், மனித உரிமைகள் ஆணையம், தமிழ் ஈழம் அமைப்பதற்காக, ஈழத் தமிழர்கள் இடையே ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும்.

உலகின் பல்வேறு நாடுகளில் வாழ்கின்ற ஈழத் தமிழர்கள் அனைவரும், அந்தப் பொது வாக்கெடுப்பில் வாக்கு அளிக்க வகை செய்ய வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.