India

கேரள சிறுமிகள் கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை? : அரசு வழக்கறிஞர் பணிநீக்கம் - பினராயி விஜயன் அதிரடி!

கேளளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வாளையார் அட்டப்பள்ளத்தைச் சேர்ந்த தம்பதி ஷாஜி - பாக்கியம். இவர்களுக்கு இரண்டு மகள்கள். இந்தத் தம்பதியின் மூத்த மகள் 13 வயதுச் சிறுமி 2017-ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதியன்று வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

பின்னர், உயிரிழந்த சிறுமியின் தங்கை போலிஸாரிடம் இரண்டு நபர்கள் முகமூடியுடன் சென்றதாகக் கூறியுள்ளார். ஆனால் அதுதொடர்பான புகாரில் போலிஸார் எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் அந்த சம்பவம் நடைபெற்று இரண்டு மாதங்களிலேயே அதாவது மார்ச் மாதத்தில் சிறுமியின் தங்கையும் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி மாநிலத்தையே உலுக்கியது.

இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. சிறுமிகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி இருவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள்

இதனையடுத்து இந்த வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. பின்னர் போலிஸார் நடத்திய விசாரணையில், சிறுமியின் அம்மா வழிவந்த உறவினர் மது மற்றும் தந்தையின் நண்பர் ஷிபு ஆகியோரை கைது செய்து போக்‌ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

மேலும் உறவினர் சிலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் சரியான தெளிவு இல்லாத காரணத்தால் வழக்கில் தொடர்புடைய சிலரை போலிஸார் விடுவித்ததாகவும் தெரியவந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது போதிய முகாந்திரம் இல்லை என கேரள நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரை விடுதலை செய்தது.

இதில் தொடர்புடைய 17 வயது சிறுவன் ஜுவனைலை மட்டும் நீதிமன்றம் விசாரணை நடத்திவருவதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் காவல்துறை முறையான விசாரணை நடத்தி ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்றும் அரசுத் தரப்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் சரியாக வாதாடாததால் தான் சிறுமிகளை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் தப்பித்து விட்டதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Also Read: தனியாரில் பணிபுரியும் பெண்களுக்கும் பேறுகாலத்தில் ஊதியத்துடன் விடுமுறை திட்டம் : அசத்தும் பினராயி விஜயன்

இந்நிலையில் சிறுமிகள் வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் லதா ஜெயராஜ் என்பவரை அரசு வக்கீல் பதவியில் இருந்து நீக்க கேரள முதல்வர் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், வாளையார் வழக்கை விசாரித்த சில போலிஸார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டும் எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த வழக்கில் சிறுமிகளின் பெற்றோர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் நாங்கள் எதிர்க்கமாட்டோம். மேல் முறையீடு செய்யும்போது மீண்டும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி முறையாக விசாரணை நடத்தப்படும்” என அவர் தெரிவித்தார்.