India
“முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே” - சரத் பவார் அறிவிப்பால் முடிவுக்கு வந்தது மராட்டிய அரசியல் குழப்பம்!
மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவு தனிப்பெரும்பான்மை இல்லாத சூழல் ஏற்பட்டது. சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்பதில் சிவசேனா உறுதியாக இருந்ததால், தனிப்பெரும் கட்சியாக அதிக தொகுதிகளை வென்ற பா.ஜ.கவால் ஆட்சியமைக்க முடியவில்லை.
இதையடுத்து, பா.ஜ.கவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியது. அதிலும் உடனடியாக முடிவு எட்டப்படாத நிலையில் ஆளுநரின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஆறு மாதங்களுக்குள் ஆட்சியமைக்க உரிமை கோரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா தலைவர்களுடன் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.
மூன்று கட்சிகளும் கூட்டணி ஆட்சி அமைக்க குறைந்தபட்ச செயல்திட்டத்தை முதலில் தனித்தனியே உருவாக்கினார்கள். அதன் பின்னர் மூன்று கட்சியின் முக்கிய தலைவர்களும் இணைந்து விவாதித்தனர். பின்னர் தீவிரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் குறைந்தபட்ச செயல் திட்டம், யார் யாருக்கு என்ன பதவி என்பது குறித்து விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், மும்பையில் இன்று மூன்று கட்சிகளின் தலைவர்களும் மகாராஷ்டிராவில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ்- சிவசேனா இணைந்து புதிய அரசை அமைப்பதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
இதையடுத்து, மகாராஷ்டிராவின் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவி ஏற்பார் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார்.
நாளை மூன்று கட்சிகளும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து கூட்டணியை உறுதி செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும், தொடர்ந்து ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர மூன்று கட்சிகளும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவழியாக மகாராஷ்டிராவில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!