India
மராட்டிய அரசியல்: ‘ட்விஸ்ட்’ வைத்த சரத் பவார்... அவசர அவசரமாக இறுதி செய்யப்பட்ட கூட்டணி - பின்னணி என்ன?
மராட்டிய மாநிலத்தில் அக்டோபர் 21ம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் 24ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. பா.ஜ.க - சிவசேனா கூட்டாகவும், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டாகவும் தேர்தலை சந்தித்தன. பா.ஜ.க 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றன.
பா.ஜ.க-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இருந்தாலும் கூட அதிகாரத்தில் சமபங்கீட்டில் இழுபறி தொடர்ந்தது. அதன் பின்னர் மாநில அரசியலில் நேரடி அரசியல் எதிரியான சரத் பவாருடன் பேச்சுவார்த்தை தொடங்கியது சிவசேனா. சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டது. மகாராஷ்ட்ரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி பா.ஜ.க, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த நிலையில் வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதால் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை செய்தார். மத்திய அமைச்சரவை அதற்கு ஒப்புதல் அளிக்கவே நவம்பர் 13ம் தேதி குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.
மும்பையில் உள்ள சரத் பவாரின் இல்லத்தில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சிவசேனா பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என பவார் செக் வைக்கவே தங்களது எம்.பி-யின் மத்திய அமைச்சர் பதவியை சிவசேனா ராஜினாமா செய்ய வைத்தது. அதன் பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பல கட்டங்களாக கூட்டணியில் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார் சரத் பவார்.
காங்கிரஸ் உயர்மட்டக் குழு மராட்டிய அரசியல் சூழல் குறித்தும் சிவசேனா உடனான கூட்டணி ஆட்சியில் இடம்பெறுவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியது. மதச்சார்பின்மை கருத்தில் சிறிதும் உடன்படாத சிவசேனாவுடன் எப்படி கூட்டணி வைப்பது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் உத்தவ் தாக்ரே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆட்சியமைக்க ஆதரவு தருமாறு கோரினார்.
மூன்று கட்சிகளும் கூட்டணி ஆட்சி அமைக்க குறைந்தபட்ச செயல்திட்டத்தை முதலில் தனித்தனியே உருவாக்கினார்கள். அதன் பின்னர் மூன்று கட்சியின் முக்கிய தலைவர்களும் இணைந்து விவாதித்தனர். சோனியா காந்தி, சரத் பவார், உத்தவ் தாக்கரே ஆகியோருக்கு இந்த குறைந்தபட்ச செயல்திட்டம் அனுப்பிவைக்கப்பட்டது. காங்கிரஸை இந்தக் கூட்டணியில் இடம்பெற வைக்க சரத் பவார் தொடர்ந்து பலகட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார். இதில் சில திருப்பங்களும் நடந்தன. மூன்று கட்சிகளும் இணையக் காரணமான சரத் பவாரே இந்தத் திருப்பங்களுக்கு காரணமாகவும் இருந்தார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் பிரதமர் மோடியுடன் பவாரின் சந்திப்பு குழப்பத்தை கிளப்பியது. இந்தக் கூட்டதில் அமித்ஷாவும் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. இதில் மராட்டிய விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசப்பட்டதாக ட்விட்டரில் பவார் பதிவிட்டிருந்தார். ஆனால் இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து பேசப்பட்டதாகவும் மத்திய அரசில் 3 கேபினட், அடுத்த குடியரசுத் தலைவர் பவார், மராட்டியத்தில் துணை முதல்வர் பதவி, துணை பிரதமர் பதவி ஆகிய பதவிகளும் தேசியவாத காங்கிரஸ் பிரமுகர்கள் மீதான வழக்குகள் விலக்கிக் கொள்ளப்படும் என்பது உள்ளிட்டவை பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்தச் செய்திகள் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரவவே கூட்டணிக்கு சம்மதம் தெரிவிக்க காலம்தாழ்த்தி வந்த காங்கிரஸ் நேற்று மாலையே டெல்லியில் உள்ள பவார் வீட்டுக்கு இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைக்கு விரைந்தது. இதில் காங்கிரஸ் சார்பில் அகமது பட்டேல், ஜெயராம் ரமேஷ், கார்கே ஆகியோரும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், அஜித் பவார், பிரபுல் பட்டேல், நவாப் மாலிக் ஆகியோரும் பங்கேற்றனர். இந்தப் பேச்சுவார்த்தையில் குறைந்தபட்ச செயல் திட்டம், யார் யாருக்கு என்ன பதவி என்பது குறித்து விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தை இறுதியாகியுள்ள நிலையில் சிவசேனா தங்கள் எம்.எல்.ஏ-க்களுடன் நாளை ஆலோசனை செய்ய இருக்கிறது. உத்தவ் தாக்ரே - சரத் பவார் இடையே இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நாளை நடக்க இருக்கிறது. நவம்பர் 30ம் தேதிக்குள் ஆட்சி அமைப்பதற்கான வேலைகள் தொடங்கக்கூடும் என்று மகாராஷ்டிரா அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
துணை முதல்வர் பொறுப்புக்கு மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியின் தலைவரான பாலசாகேப் தோரட், முன்னாள் மகாராஷ்டிர முதல்வர்கள் பிருத்விராஜ் சவான், அசோக் சவான் ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது. தேசியவாத காங்கிரஸ் தரப்பில் அஜித் பவார், ஜெயந்த் பட்டீல், தனஞ்செய் முண்டே ஆகியோரின் பெயர்கள் துணை முதல்வர் பதவிக்கு அடிபடுகின்றன.
- சி.ஜீவா பாரதி
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!