India
10,000 ஆதிவாசிகள் மீது ஒரே நேரத்தில் தேசதுரோக வழக்கு - ஜனநாயகத்தைக் கொல்கிறதா பா.ஜ.க அரசு?!
2014ம் ஆண்டு பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்போர் மீது தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. 2014 முதல் 2016 வரை மட்டும் 165 பேர் மீது 112 தேசதுரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றமே அரசை விமர்சிப்பது தேசதுரோகம் ஆகாது எனத் தெரிவித்தது.
இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரே மாவட்டத்தில் உள்ள 10,000 ஆதிவாசி மக்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
பீகார் மாநிலதிலிருந்து பிரிக்கப்பட்டு 2000ம் ஆண்டு ஜார்கண்ட் தனி மாநிலமாக உருவானது. 2011ம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி 3 கோடியே 20 லட்சம் மக்கள் அங்கு வாழ்ந்து வருகிறார்கள். 2000ம் ஆண்டு முதல் 3 முறை பா.ஜ.க கூட்டணியும், ஒரு முறை காங்கிரஸ் கூட்டணியும் ஆட்சியில் இருந்திருக்கிறது. 2014ம் ஆண்டு முதல் பா.ஜ.கவின் ராகுபர் தாஸ் தலைமையிலான அரசு அங்கு ஆட்சியில் இருக்கிறது. இந்த அரசு தான் 10,000 ஆதிவாசி மக்கள் மீது வழக்குப் பதிவு செய்து இருக்கிறது.
ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியிலிருந்து ஒரு மணிநேர பயண தூரத்தில் அமைந்துள்ளது குந்தி மாவட்டம். ஆதிவாசிகள் அதிகம் வாழும் இந்தப் பகுதியில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஆதிவாசி மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு அந்தஸ்து அடங்கிய கல்வெட்டுகளை (பதல்காடி இயக்கம்) தங்களில் கிராமங்களில் வைத்திருக்கிறார்கள்.
பழங்குடிகளின் நில உரிமையைப் பாதுகாக்க 1908ம் ஆண்டு சோட்டாநாக்பூர் குத்தகை சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை 2016ம் ஆண்டு பா.ஜ.க அரசு நீர்த்துப் போக செய்ததன் காரணமாக தான் 'பதல்காடி இயக்கம்’ தொடங்கியது. 2016ம் ஆண்டு இதை எதிர்த்து ஆதிவாசிகள் போராட்டம் நடத்தவே அப்போது போலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். அதன் பின்னர் 2017 மார்ச் 3ம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்ட சிறப்பு அந்தஸ்து அடங்கிய குறிப்புகளை பந்த்ரா கிராமத்தில் பச்சை நிற கல்வெட்டில் பதித்தனர். சுக்ரு கிராமத்தில் கிராம சபையின் அனுமதி இல்லாமல் புதிய கட்டிடம் உருவாக்க நிலம் கையகப்படுதப்பட்டது மக்களிடம் கோபத்தை உண்டாக்கியது.
ஆதிவாசி மக்கள் வைத்த அந்த பச்சை நிற கல்வெட்டில் என்ன இருந்தது?
இந்திய அரசியலமைப்பு சட்டம் 13(3) (அ)-ன் படி விருப்பம் அல்லது பாரம்பரியம் என்பது சட்டத்தின் சக்தி. அது தான் அரசியலமைப்பின் சக்தியாகும்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் 19(5) ஆதிவாசி மக்கள் வாழும் பகுதிகளில் வெளியாட்கள் அல்லது வழக்கத்திற்கு மாறாக எந்த ஒரு நபரும் சுற்றவோ, தங்கவோ, குடியேறவோ அனுமதி இல்லை.
இந்திய அரசியலமைப்பு சட்டம் 19(6)-ன் படி இந்த குறிப்பிட்ட பகுதிகளில் வெளியாட்கள் தொழில்கள், வேலைவாய்ப்புகளை உருவாக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
5(1) - 244(1) (b)-ன் படி பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றம் இயற்றும் சட்டங்கள் இந்தப் பகுதிக்குப் பொருந்தாது.
2017 ஜூன் 25 அன்று பதிவு செய்யப்பட்ட வழக்கில் ‘சமூக விரோதிகள்’ சாலைகளைத் தடுத்து கற்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் தடுத்து வரி வசூல் செய்ததாகவும். அந்த சாலைகளை தடுக்கும் விதமாக அமைக்கப்பட்ட தடுப்புகளை அகற்ற முயன்ற போது கிராமத்தினர் பாரம்பரிய ஆயுதங்களை கொண்டு தாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல 2017 ஜூன் 24ல் பதிவுசெய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில், ஆதிவாசிகளின் பகுதியில் உள்ள மக்களை தவறான வழியில் வழிநடத்தியதாகவும், அரசியலமைப்பின் தவறான விளக்கத்தை முன்வைத்ததாகவும், அரசு நிர்வாகத்தைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், அமைதிக்கு குந்தகம் விளைவித்து சட்ட ஒழுங்கு பிரச்னை உண்டாக்கியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
2017ம் ஆண்டு ஜூன் முதல் 2018 ஜூலை வரை 19 எஃப்.ஐ.ஆர்-கள் மூலம் 11,200 ஆதிவாசிகள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. 14 எஃப்.ஐ.ஆரில் 10,000 பேர் மீது 124A தேச விரோத சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த குந்தி மாவட்டமே பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போராடி 25 வயதில் உயிரை இழந்த பிர்சா முண்டா பிறந்த மாவட்டமாகும். 1928ம் ஆண்டு ஒலிம்பிக்கில் ஹாக்கி பிரிவில் தங்கம் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஜெய்பால் சிங் முண்டாவும் இங்கு தான் பிறந்துள்ளார். 1950களில் ஆதிவாதிகளின் குரலாக விளங்கியவர் இவர்.
அரசின் இந்த ஒடுக்குமுறைச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நவம்பர் 30ம் தேதி தொடங்க இருக்கும் ஜார்கண்ட் மாநில தேர்தலில் குந்தி மாவட்ட மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
- சி.ஜீவா பாரதி
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!