India

ஃபாத்திமா மரணத்திற்கு IIT வளாகத்தில் நிலவும் மத - சாதியப் பாகுபாடே காராணம் : கேரள எம்.பி ஆவேசம்

சென்னை ஐ.ஐ.டி.,யில் கடந்த வாரம் முதுகலைப் படிப்பு பயின்று வந்த கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு ஃபாத்திமா லத்தீப் தனது மரணத்திற்கு முக்கிய காரணமாக சுதர்சன் பத்மநாபன் என்கிற பேராசிரியரின் பெயரைக் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், மாணவி ஃபாத்திமா தற்கொலைக் குறித்து நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பினார். மேலும், மாணவி மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரி மக்களவையிலிருந்து தி.மு.க எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதனையடுத்து, கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த என்.கே பிரேமச்சந்திரன் எம்.பி மாணவி ஃபாத்திமா மரணம் குறித்து லோக்சபாவில் பேசினார். அப்போது, “மெட்ராஸ் ஐ.ஐ.டி.,யில் படித்து வந்த எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை செய்துக்கொண்டார். அவர் படிப்பில் சிறந்த மாணவி. அதனால் ஃபாத்திமா மரணத்தை எதார்த்தமாக எடுத்துக்கொள்ள முடியாது.

கடந்த ஒருவருடத்தில் மட்டும் சென்னை ஐ.ஐ.டி.,யில் 1 பேராசிரியர், 4 மாணவர்கள் என 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தடுக்க நிர்வாகமும் அரசும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் தான் ஃபாத்திமா மரணமும் நிகழ்ந்துள்ளது. அவர் தனது தற்கொலைக்கு பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் காரணம் என செல்போனில் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

அதுமட்டுமின்றி மாணவி மரணத்திற்கு மதம் ஒரு பிரச்சனையாக இருந்துள்ளது. அந்த கல்லூரியில் சாதி - மத பாகுபாடு தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. அதனால் மதமும் அவர் மரணத்திற்கு ஒரு காரணம் என நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புக்கின்றேன்.

Also Read: மாணவி ஃபாத்திமா ’மர்ம’ மரணம் : சுதர்சன் பத்மநாபன் உட்பட ஐ.ஐ.டி பேராசிரியர்கள் 3 பேருக்கு சம்மன் !

அதுமட்டுமின்றி, மாணவியின் பெற்றோர்கள் கல்வி நிறுவனத்தை கலங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டதாக அவர்கள்மீது ஐ.ஐ.டி நிர்வாகம் போலிஸில் புகார் அளித்துள்ளது. இது மிகவும் துரதிஷ்டமானது.

இது ஒரு தனிபட்ட பிரச்சனை அல்ல. சென்னை ஐ.ஐ.டி.,யில் எதிர்காலத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களின் நலன் சார்ந்தது. எனவே ஃபாத்திமா மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் விசாரணைக் குழு அமைத்து இனி இதுபோல உயிரிழப்புகள் நடக்காமல் தடுக்கவேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.