India

’ஃபாத்திமா மரணம் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்’ - டி.ஆர் பாலு உறுதி !

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் 17வது நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நாளை (நவ.,18) தொடங்கவுள்ளது. இது அடுத்த மாதம் டிச.,13ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் ஜம்மு காஷ்மீர் விவகாரம், பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பல பிரச்னைகள் தொடர்பாக கேள்வியெழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தை சுமூகமாக நடத்துவதற்காக டெல்லியில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், தி.மு.க மக்களவைக்குழு உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, வைகோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, ”பொருளாதார வீழ்ச்சியால் அதிகரித்து வரும் வேலை இழப்பு, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை தொடர்பு மொழியாக்க வேண்டும், ஐ.ஐ.டி மாணவி மர்ம மரணம் உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடரில் எழுப்பப்படும்” என்று குறிப்பிட்டார்.

”மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி மத்திய அரசு 50% இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று தி.மு.க பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானத்தை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் தி.மு.க தரப்பில் வலியுறுத்தப்படும்” என்று டி.ஆர்.பாலு கூறினார்.

மேலும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட பலரை கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரம் உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்தும் நடாளுமன்றக் கூட்டத்தில் பேசப்படும் என்றும், அது தொடர்பாக இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்திலும் பேசப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.