India

பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா - விரைவில் விற்பனைக்குத் தயார் ! : மோடி அரசின் அடுத்த அதிர்ச்சி வைத்தியம்

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்றதில் இருந்து, இந்தியப் பொருளாதாரம் பலத்த சரிவைச் சந்தித்து வருகிறது. வேலைவாய்ப்பின்மை வெகுவாக அதிகரித்ததோடு, பல நிறுவனங்களை மூடக்கூடிய அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனை சமாளிப்பதற்காக, அடிக்கடி செய்தியாளர்களைச் சந்தித்து ஏதாவது புதிய புதிய அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிவந்தார். ஆனால், அவை எந்தப் பயனும் அளிக்காதநிலையில், தற்போது மத்திய அரசிடம் இருக்கின்ற பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த நிதியமைச்சர், பொருளாதார மந்த நிலையைச் சரிசெய்ய அரசு தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், அதனால் சில துறைகளில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், வளர்ச்சியில் முன்னேற்றம் இல்லாத சில பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் விற்கப்போவதாகவும், குறிப்பாக நஷ்டத்தில் இயங்கிவரும் ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை மார்ச் மாதத்திற்குள் தனியாரிடம் விற்க முடிவு எடுத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிறுவனங்களை வாங்குவதற்கு சர்வதேச முதலீட்டு நிறுவனங்கள் பலவும் ஆர்வம் காட்டி வருகின்றன. முதலீட்டாளர்களிடம் இருந்து தெளிவான பதில் கிடைத்ததும் இதனை விற்றுவிடுவோம் என அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Also Read: பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியாரிடம் விற்கும் மோடி அரசு: தரக்குறியீட்டை குறைப்பதாக ‘மூடிஸ்’ எச்சரிக்கை

முன்னதாக பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தைத் தனியார் மயமாக்குவது நல்லதல்ல என்று சர்வதேச தரக் குறியீட்டு நிறுவனமான ‘மூடிஸ்’ எச்சரிக்கை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மத்திய அமைச்சரின் இந்தப் பேட்டி ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், பொதுத்துறை நிறுவனங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால் அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள், அரசு பதவியை ராஜினாமா செய்துவிட்டு, குத்தகைக்கு எடுக்கும் தனியார் நிறுவனத்திடம் வேலைக்குச் சேர வேண்டும்.

இதனால் ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சியைக் கண்டித்தும் ஊழியர்கள் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Also Read: ‘ஏர் இந்தியாவை முழுவதும் தனியாருக்கு ஒப்படைக்க மோடி அரசு முடிவு’: அதிர்ச்சித் தகவல்!