India

“சபரிமலை வழக்கின் மாற்றுத் தீர்ப்பை சரியாகப் படித்து செயல்படுத்துங்கள்’’ - உச்சநீதிமன்ற நீதிபதி அறிவுரை!

கர்நாடகா முன்னாள் அமைச்சர் சிவகுமாருக்கு ஜாமின் வழங்கியதை எதிர்த்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ப.சிதம்பரம் வழக்கில் தெரிவித்த அதே கருத்தை அப்படியே நகல் எடுத்து சிவகுமார் வழக்கிலும் அமலாக்கத்துறை சேர்த்திருப்பதாக அவரது வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, அபிஷேக் மனுசிங்வி ஆகியோர் குற்றம்சாட்டினர். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அமலாக்கத்துறை மனுவை உடனடியாகத் தள்ளுபடி செய்தனர்.

அப்போது கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா அதனை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு, நீதிபதிகளில் ஒருவரான ரோகிண்டன் ஃபாலி நாரிமன், அரசின் செயல்பாடுகளுக்கு கடும் கண்டணத்தைத் தெரிவித்தார்.

மேலும், அரசின் செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்த அவர் பல வழக்களில் பல உத்தரவுகளை உச்சநீதிமன்றம் வெளியிடுகிறது. எதனையும், அரசு கருத்தில் கொள்வதில்லை.

நேற்றுக் கூட சபரிமலை வழக்கில் பல கருத்துக்களை தெரிவித்துள்ளோம். அதனை எல்லாம் படித்து செயல்படுத்தச் சொல்லுங்கள் என்று மீண்டும் துஷார்மேத்தாவிடம் நீதிபதி கடுமையாக தெரிவித்தார்.

நேற்று சபரிமலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ரோகிண்டன் நாரிமனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.