India
60% இந்திய குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து இல்லை? யாருக்காக குழந்தைகள் தினம் கொண்டாடுகிறோம்?!
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அவர்களை நினைவுகூறும் விதமாக, நவம்பர் 14-ம் தேதியை குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம்.
இந்த குழந்தைகள் தினத்தை விமரிசையாக கொண்டாடிவரும் இதே இந்திய நாட்டில் தான், ஊட்டச்சத்து குறைபாட்டால், பல் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசால் இந்தியாவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், குழந்தைகளுக்கு போதிய உணவு இல்லாமல் ஊட்டச்சத்து பாதிப்பு ஏற்பட்டு இறப்பதாகவும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூர் பகுதியில் நடுநிலைப் பள்ளி ஒன்றில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவிற்கு சப்பாத்தி ரொட்டியும் அதனைத் தொட்டு சாப்பிடுவதற்கு உப்பும் கொடுத்துள்ளனர். இது ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 15-ம் தேதி, ‘யுனிசெஃப்’ அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த 2018-ம் ஆண்டு வரை இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை என்பது 8 லட்சத்து 82 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், 6 முதல் 23 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளில் 42 சதவீதம் குழந்தைகளுக்கு மட்டுமே போதுமான உணவு அளிக்கப்படுவதாகவும், அதிலும் 21 சதவீதம் பேர் மட்டுமே சரியான உணவைப் பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. அதேபோல், 6 முதல் 8 மாத குழந்தைகளில் 53 சதவிகித குழந்தைகளுக்கு மட்டுமே சரியான நேரத்தில் உணவளிக்கப்படுவதாக யுனிசெஃப் சுட்டிக்காட்டியுள்ளது.
அதுமட்டுமின்றி, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஒவ்வொரு ஐந்து வயது குழந்தைக்கும் வைட்டமின் ஏ குறைபாடு இருப்பதாகவும், ஒவ்வொரு மூன்று வயது குழந்தைக்கும் வைட்டமின் பி 12 குறைபாடு இருப்பதாகவும், இதில் ஐந்தில் இரண்டு பேருக்கு இரத்த சோகை இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வளர்ச்சி குன்றிய குழந்தைகள்:
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இந்தியாவில் உள்ள ஏழைக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளில் 51 சதவீதம் பேர் தங்கள் வயதுக்கேற்ற வளர்ச்சியின்றி காணப்படுவதாகவும், இதுவே பணக்கார குடும்பங்களில் ஐந்தில் ஒரு பங்கு அதாவது 22 சதவீத குழந்தைகள் வயதுக்கேற்ற வளர்ச்சியின்றி இருப்பதாகவும், அதில் ஒட்டுமொத்தமாக, 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 38 சதவீதம் பேர் வளர்ச்சி குன்றியவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது யுனிசெஃப்.
10 குழந்தைகளில் ஒருவர் நீரிழிவு நோய்:
தேசிய ஊட்டச்சத்து கணக்கெடுப்பில் ( என்.சி.டி - NCDs) வெளியான தகவலின் படி, இந்தியாவில் குழந்தைகள் தொடர்ந்து ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படும் அதேவேளையில், அவர்களுக்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கான ஆரம்ப அறிகுறி இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும், 5 முதல் 9 வயது வரையிலான 10 குழந்தைகளில் ஒருவர் நீரிழிவு நோய் வருவதற்கு முந்தைய நிலை அறிகுறியில் இருப்பதாகவும், 1 சதவீத குழந்தைகள் ஏற்கனவே நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பதாக அக்டோபர் 8-ம் தேதி வெளியான அரசின் விரிவான தேசிய ஊட்டச்சத்து ஆய்வுகளில் ( சி.என்.என்.எஸ் - CNNS) தெரியவருகிறது.
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு ஆய்வறிக்கை:
இறுதியாக, மத்திய அரசின் 2019-ம் ஆண்டுக்கான உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்த ஆய்வறிக்கையில், “இந்தியா முழுவதும் உள்ள குழந்தைகளில் 38.4 சதவீத குழந்தைகளுக்கு வயதுக்கேற்ற உயரமில்லை என்றும், 21 சதவீதக் குழந்தைகளுக்கு உயரத்திற்கேற்ற எடையில் இல்லை என்றும், 35.7 சதவீத குழந்தைகள் எடைக்குறைவாகவும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அதில் தமிழகத்தில் மட்டும், 12.9 சதவீதக குழந்தைகள் வயதுக்கேற்ற உயரத்தில் இல்லையென்றும், 8 சதவீதம் குழந்தைகள் உயரத்திற்கு ஏற்றவகையில் எடையில்லை எனவும், 1.9 சதவீத குழந்தைகள் எடைக்குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பெரும்பான்மைப் பகுதிகளில் பசியால் வாடும் குழந்தைகள் பற்றியும், அவர்களிடம் பரவியிருந்த ஊட்டச்சத்துக் குறைபாடு பற்றியும் அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தக் குழந்தைகள் விளிம்புநிலையில் வாழும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளாவர். இவர்களுள் பெரும்பான்மையானோர் தாழ்த்தப்பட்டவர்களும், பழங்குடியினர் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள இத்தகைய பாதிப்புக்குறித்து குழந்தைகள் நல அமைப்பின் நிர்வாகியிடம் பேசினோம். அப்போது அவர், “குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு என்பதனை எளிதில் கடந்துச் செல்லமுடியாது. ஏனெனில் அது இந்திய சமூகத்தின் ஒட்டுமொத்தப் பிரச்சனை ஆகும்.
இங்கு, உடல் ரீதியிலான தாக்குதல் எப்படி குழந்தைகளுக்கான உரிமை மீறலோ, அதேபோல் ஊட்டச்சத்து மறுப்பும் உரிமை மீறல் ஆகும். குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ தேவையான சத்தான உணவுகள் கிடைக்காமல் போவதும் ஒருவகை உரிமை மீறல் என நாம் புரிந்துக் கொள்ளவேண்டும்.
குழந்தைகள் பராமரிப்புக்கான சட்டங்களை உருவாக்க இந்த அரசாங்கம் முன்வரவேண்டும். மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசின் மோசமான செயல்திட்ட நடவடிக்கைகளினால் இத்தகைய பாதிப்புகளை இந்தியாவில் உள்ள ஏழை மக்கள் நித்தமும் அனுபவித்து வருகிறார்கள்” என கூறினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!