India

17-ம் தேதி பணி ஓய்வு - அதற்குள் 4 முக்கிய வழக்குகளின் தீர்ப்பை வெளியிடும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்!

தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோகாய் வரும் 17ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து தனது தலைமையிலான அமர்வில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் தீர்ப்பை பணி ஓய்வுக்குள் அவர் வெளியிடுகிறார்.

அவ்வகையில், அயோத்தி வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. அதைத்தொடர்ந்து நிலுவையில் உள்ள நான்கு முக்கிய வழக்குகளின் தீர்ப்பு ஒரு வாரத்திற்குள் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

ரபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டதில், ஊழல் நடைபெறவில்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கில் வரும் வாரம் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

மேலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடியை ராகுல் காந்தி ‘காவலாளியே திருடன்’ என விமர்சித்ததற்கு எதிரான அவதூறு வழக்கு மற்றும் சபரிமலை கோவிலில் பெண்களுக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு ஆகிய முக்கியமான வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

மேலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளும் கொண்டுவரப்பட வேண்டும் என்ற டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலும் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.