India
“பிரச்சனைக்கு ஒரு தீர்வினைக் கொடுத்திருந்தாலும், பல கேள்விகளும் எழுகின்றன” : சி.பி.ஐ(எம்) அறிக்கை!
நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், மூன்று மாதங்களில் மத்திய அரசு அறக்கட்டளை அமைத்து கோயில் கட்டுவதற்கான நெறிமுறைகளை வகுக்க வேண்டும். அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் அயோத்தி தீர்ப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, “நீண்ட பல ஆண்டுகளாக நீடித்து வந்த அயோத்தியா பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
பிரச்சனைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை, ஒரு அறக்கட்டளை மூலம் கோயில் கட்டுவதற்காக இந்துக்களுக்கு அளித்திட வேண்டுமென அந்த தீர்ப்பு கூறுகிறது. மேலும், மசூதி கட்டுவதற்காக வக்பு வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. பல ஆண்டு காலமாக இப்பிரச்சனையை மையமாக வைத்து உருவாக்கிய வன்முறைகள், கலவரங்களால் துயரமிக்க பல உயிர்ச் சேதங்களை நாடு சந்தித்திருக்கிறது.
அயோத்தியா பிரச்சனைக்கு சமரசப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வினை எட்ட முடியவில்லையென்றால், நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தீர்வு காண வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிறது. இப்போது உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பிரச்சனைக்கு ஒரு தீர்வினைக் கொடுத்திருந்தாலும், அதன் மீது பல கேள்விகளும் எழுகின்றன.
1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதை சட்ட விரோதச் செயல் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் இந்த நடவடிக்கை மதச்சார்பின்மை மீதான தாக்குதல் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. மசூதியை இடித்தவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கினை விரைந்து நடத்தி குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
மத வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்பு சட்டத்தின் (1991) தேவையை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது. அந்த சட்டம் உறுதியாக அமலாக்கப்பட வேண்டும். எந்த ஒரு மத வழிபாட்டுத்தலம் மீதும் புதிய சர்ச்சையைக் கிளப்புவதற்கு அனுமதித்தல் கூடாது எனவும் மத நல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும் பாதுகாப்பதே நம்முன் உள்ள முக்கியமான கடமை” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!