India

நள்ளிரவில் இளம் பெண்ணுக்கு பாதுகாப்பாக காத்திருந்த அரசு பேருந்து: நெகிழ வைத்த ஓட்டுநர், நடத்துநரின் செயல்

பொதுவாக நள்ளிரவு நேரங்களில் பெண்கள் தனியாக பேருந்தில் சென்றுவிட்டு வேறு எங்கேயும் பயணம் செய்ய பாதுகாப்பற்ற சூழலே இன்னும் நீடிக்கிறது. அப்படி இறங்கி வெளியே செல்லும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியே.

இந்நிலையில் கேரளாவில் நள்ளிரவில் பேருந்தில் இருந்து இறங்கிய இளம் பெண்ணின் குடும்பத்தினர் வரும் வரை பேருந்தை எடுக்காமல் அதே இடத்தில் நிறுத்திவைக்கப்பட்ட சம்பவம் நெகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணிற்கு பாதுகாப்பாக இருந்த ஓட்டுநருக்கும், நடத்துநருக்கும் பாராட்டுகள் குவிந்துள்ளது.

கடந்த அக்டோபர் 31-ம் தேதி இரவு கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து மதுரை நோக்கி புறப்பட்டது கேரள அரசு பேருந்து. இந்த பேருந்தில் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி எல்சினாவும் பயணம் செய்தார். இவர் பெங்களூருவில் எம்.பில் படித்துவருகிறார்.

வேலைக்கான நேர்காணலில் பங்கேற்பதற்காக அந்த பேருந்தில் எல்சினா பயணம் மேற்கொண்டுள்ளார். கஞ்சிரப்பள்ளி என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, பின்னர் காலையில் அங்கிருந்து நேர்காணலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்.

கண்ணூரில் இருந்த புறப்பட்ட எல்சினா கஞ்சிரப்பள்ளிக்குச் செல்லும் போது இரவு 11.45 மணியாகிவிட்டது. அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து பெய்த கனமழையால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருள் சூழ்ந்துக் காணப்பட்டுள்ளது.

இதனைப் பார்த்த எல்சினா மிகுந்த பத்தற்றத்திற்குள் ஆளானார். மேலும் எல்சினா இறங்கவேண்டிய பேருந்து நிறுத்த இடத்தில் வேறு எந்த பயணிகளும் இறங்கவில்லை. இதனால் அச்சத்துடன் இருந்த எல்சினாவினற்கு உதவ பேருந்து நடத்துநர் சாஜூ முன்வந்தார்.

”எல்சினாவிடம் எங்கு செல்லவேண்டும்? அழைத்துச்செல்ல யாரேனும் வருகிறார்களா” என நடத்துநர் விசாரித்துள்ளார். அப்போது பேருந்து நிலையத்தில் இருந்து தன்னை அழைத்துச் செல்வதாக கூறிய உறவினர், போன் எடுக்கவில்லை என நடத்துநரிடம் எல்சினா கூறியுள்ளார்.

யாருமே இல்லாத இந்த இடத்தில் இளம் பெண்ணைத் தனியாக விட்டுச்செல்ல மனமில்லாத நடத்துநர் சாஜூ, ஓட்டுநர் டென்னிஸ் சேவியரிடம் பேசி, பெண்ணை அழைத்துச் செல்ல ஆள் வரும் வரை காத்திருப்பது என முடிவு செய்தனர். இதற்கு சகபயணிகளிடம் பேசி ஒப்புக்கொள்ளவும் வைத்துள்ளனர்.

பயணிகளும் சம்மதித்ததைத் தொடர்ந்து இளம் பெண்ணை அழைத்துச்செல்ல உறவினர்கள் வரும்வரை அங்கேயே பேருந்து காத்துக்கிடந்தது. சிறிது நேரத்தில் எல்சினாவின் உறவினர் செல்போனில் அழைத்து தங்கள் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதால், வருவதற்கு தாமதமாகும் எனக் கூறியுள்ளார்.

இதனையடுத்து ஓட்டுநரும், நடத்துநரும் பேருந்தில் இருந்து இறங்கி பெண்ணுடன் காத்திருந்தனர். பின்னர் அரைமணிநேரத்திற்குப் பிறகு காரில் வந்த உறவினரிடம் எல்சினாவை பத்திரமாக ஒப்படைத்தனர். தங்கள் வீட்டுப் பிள்ளைக்காக பேருந்தை நிறுத்தி காத்திருந்த நடத்துநர் சாஜூக்கும், ஓட்டுநர் சேவியருக்கும் கரம் கூப்பி நன்றி தெரிவித்தனர்.

யாரோ ஒரு பெண் என விட்டுவிடாமல், பெண்ணின் இக்கட்டான சூழ்நிலையில் அவருக்காக அக்கரைக் காட்டிய கேரள அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு கேரள மக்களிடையே பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.