India

“சுயமரியாதை உடைய எவரும் பா.ஜ.க அரசின் கண்காணிப்பின் கீழ் பணியாற்றமாட்டார்கள் : சோனியா காந்தி கண்டனம்!

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி ஆர்.டி.ஐ சட்டத் திருத்த மசோதாவை கடந்த ஜூலை மாதம் மக்களவையில் நிறைவேற்றியது. மோடி அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

ஆர்.டி.ஐ சட்டத் திருத்த மசோதா மூலம் அதிகார மீறல்களை மூடி மறைக்க மோடி அரசு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்திருப்பதாவது, “இந்தியாவின் ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை போன்றவற்றின் காவலாளியாக ஆர்.டி.ஐ சட்டம் இருந்து வந்தது.

கடந்த 13 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த ஆர்.டி.ஐ சட்டத்தின் மூலம் சமூக செயற்பாட்டாளர்கள், ஜனநாயக அமைப்பினர் கோரிய தகவல்களினால் சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினரும் பயனடைந்தனர். அதுமட்டுமின்றி, தேர்தல், ஊழல், அரசின் செயல்பாடுகளில் உள்ள குறைகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி வெளிச்சத்துக்கு கொண்டு வரும் ஒரு கருவியாக ஆர்.டி.ஐ இருந்தது.

இவ்வளவு சிறப்புத் தன்மையுள்ள ஆர்.டி.ஐ சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் வேலையில் மத்திய பா.ஜ.க அரசு இறங்கியுள்ளது. குறிப்பாக ஆர்.டி.ஐ தகவல் ஆணையர்களுக்கு அரசின் குறுக்கீடு மற்றும் அச்சுறுத்தல் இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்பதற்காக அவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் மோடி அரசு தகவல் ஆணையர்களின் காலியாக உள்ள பதவியை நிரப்பாமல் 10 மாதங்களுக்கு மேலாக தேக்கி வைத்துள்ளது. மேலும் தகவல் ஆணையர்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகள் என்பதிலிருந்து 3 ஆண்டுகளாக குறைத்துள்ளது.

அதேபோல் பணியாற்றும் அதிகாரிகளின் சம்பளம் மற்றும் இதர படி நிலைகளை அரசே நிர்ணயிக்கும் என்ற வகையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை திருத்தியுள்ளது.

இதனால் மத்திய அரசின் தயவை எதிர்பார்த்திருக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். சுயமரியாதை உடைய எந்த ஒரு மூத்த அதிகாரியும் பா.ஜ.க அரசின் கண்காணிப்பின் கீழ் பணியாற்ற ஒப்புக் கொள்ளமாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.