India
இந்தியர்கள் உட்பட 7,000 பேரை வெளியேற்றும் காக்னிசன்ட் நிறுவனம் : - கலக்கத்தில் ஊழியர்கள்!
தகவல் தொழில்நுட்ப சேவையில் முன்னணி நிறுவனமாக இருக்கிறது காக்னிசன்ட். இந்நிறுவனம் சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சில பணிகளைச் செய்து கொடுக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 2.6 லட்சம் பேர் இந்த நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். அதில் 50 சதவீதமானவர்கள் அதாவது, 1.8 லட்சம் பேர் இந்தியாவைச் சேர்ந்த ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
நியூ ஜெர்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் இந்த நிறுவனம், சிக்கன நடவடிக்கையின் மூலம் வருமானத்தை உயர்த்துவதற்கு முடிவு செய்துள்ளது. அதற்காக அந்த நிறுவனத்தில் தற்போது பணியாற்றிவரும் நடுத்தர ஊழியர்கள் முதல் மூத்த உயரதிகாரிகள் வரை என 10,000 - 12,000 பேர் வரை பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 5 ஆயிரம் ஊழியர்களை மட்டும் திறன் மேம்பாடு செய்து குறைவான சம்பளத்தில் வெவ்வேறு பணிகளுக்கு மாற்றி பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளது. இதன் மூலம் மீதமுள்ள 7,000 ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்பது உறுதியாகிறது.
மேலும், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களின் உள்ளடக்கத்தை சரிபார்க்கும் பணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இந்தப் பணியில் இருந்து வெளியேறுவதால் 6,000 பணியாளர்கள் தங்களுடைய பணியை இழக்க நேரிடும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் பணிகளில் ஈடுபட்ட ஊழியர்கள் பணிசுமை காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதனையடுத்து இத்தகைய முடிவை காக்னிசன்ட் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. காக்னிசன்ட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால், மூத்த ஊழியர்கள் மற்றும் நடுத்தர ஊழியர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து ஐ.டி ஊழியர்களின் சங்கமான 'UNITE' அமைப்பின் பொதுச்செயலாளர் வெல்கினிடம் பேசினோம். அப்போது அவர் பேசுகையில், “பொதுவாக ஐ.டி நிறுவனங்கள் இதுபோல ஆட்குறைப்பு நடைவடிக்கையை தொடர்ச்சியாக செய்துவருகின்றன.
தற்போது இதே வேலையை கையில் எடுத்திருக்கும் காக்னிசண்ட் நிறுவனம் வருமானம் குறைவு என்பதால் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளது. இது உண்மையல்ல.
கடந்த மூன்றாவது காலாண்டில் காக்னிசண்ட்4.25 பில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 28 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈடுட்டியுள்ளது. இந்த வருமானம் கடந்தாண்டைவிட 4 சதவீதம் அதிகரித்துள்ளது” என்றார்.
மேலும் பேசிய அவர், “இதுபோல ஐ.டி நிறுவனங்களில் நடவடிக்கையைக் கட்டுப்படுத்த அரசிடம் முறையான சட்டம் எதுவும் இல்லை என்பதே வேதனைக்குரிய விஷயம். இதற்கு தீர்வு ஐ.டி நிறுவனங்களில் சங்கம் அமைப்பதுதான். அவர்களின் நலன்களை பேசுவதற்கு சங்கம் என்பது அவசியமானது.
அதுமட்டுமல்லாமல், கடந்தாண்டு அமெரிக்காவில் ஹெச்.சி.எல் நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. அப்போது அங்கிருந்த ஊழியர்கள் 80 பேர் சங்கத்தில் இணைந்தனர். அதன்பிறகு அவர்கள் மீண்டும் பணியமர்த்தப்பட்டார்கள். இதைத்தான் எங்கள் அமைப்பின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்துகின்றோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!