India

“எல்லையிலே ராணுவ வீரர்கள்...” - தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காத நால்வர் தியேட்டரை விட்டு வெளியேற்றம்!

பெங்களூருவில் தேசியகீதம் இசைத்தபோது எழுந்து நிற்காத 2 பெண்கள் உள்பட 4 பேர் தியேட்டரில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படவேண்டும் எனும் மத்திய அரசின் உத்தரவு கடும் சர்ச்சைக்குள்ளானது. பின்னர், இந்த விதி தளர்த்திக்கொள்ளப்பட்டாலும், இன்னும் பல திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வருகிறது.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் ஒரு திரையரங்கில், தனுஷ் நடித்த 'அசுரன்' படம் திரையிடப்பட்டுள்ளது. திரைப்படம் தொடங்குவத்கு முன் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, 2 இளம்பெண்கள் மற்றும் 2 இளைஞர்கள் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்துள்ளனர்.

இதைக் கண்டு ஆத்திரமடைந்த கன்னட திரைப்பட நடிகர் அருண் கவுடா என்பவர், தன் மொபைல் போனில் படம் பிடித்தார். பின், எழுந்து நிற்காத இளைஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Arun Gowda

தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காத இளைஞர்களை சூழ்ந்துகொண்ட அருண் கவுடா உள்ளிட்ட கும்பல், "52 வினாடிகள் இசைக்கப்படும் தேசியகீதத்துக்கு எழுந்து மரியாதை செய்யாத நீங்கள் எதற்கு 3 மணிநேரம் ஓடும் படம் பார்க்க வந்தீர்கள். நீங்கள் அனைவரும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகளா?. நாட்டை பாதுகாக்க இராணுவ வீரர்கள் எல்லையில் கால்கடுக்க நிற்கிறார்கள். ஆனால் நீங்கள் தேசியகீதத்துக்கு மரியாதை செய்ய எழுந்து நிற்க மாட்டீர்களா?" என ஆவேசமாகப் பேசியுள்ளனர்.

பின்னர், தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காத நால்வரையும் தியேட்டரை விட்டு வெளியேறும்படி வற்புறுத்தினர். இதையடுத்து அவர்கள் நால்வரும் தியேட்டரில் இருந்து வெளியேறினார்கள்.

இந்த சம்பவம் குறித்து யாரும் போலிஸில் புகார் தெரிவிக்கவில்லை என்றாலும், இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.