India

“கேள்வி கேட்பவர்களின் நோக்கங்களை கேள்வி கேட்கமாட்டேன்” : பியூஷ் கோயல் கருத்துக்கு அபிஜித் பானர்ஜி பதிலடி!

சமீபத்தில் பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசுக்கு பொருளாதார அறிஞர்கள் அபிஜித் பானர்ஜி அவரது மனைவி எஸ்தர் டஃப்லோ மற்றும் மைக்கேல் கிரமர் ஆகிய மூன்று பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இந்தியரான அபிஜித் பானர்ஜி இந்திய பெருளாதாரம் குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார்.

குறிப்பாக,“இந்திய பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருப்பதாகவும், தற்போதைய புள்ளிவிவரங்களைப் பார்த்தால், விரைவில் மீட்சியடையும் என்று உறுதியாகக் கூற முடியாது” எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்துகளை பரிசீலனை செய்யாமல் அபிஜித் பானர்ஜி-க்கு கருத்துக்கு எதிர்விணையை செய்யத் தொடங்கியுள்ளனர் மோடி தலைமையிலான அமைச்சர்கள். முன்னதாக பிரதமர் மோடி தவிர பாஜக அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் யாரும் அபிஜித் பானர்ஜிக்கு வாழ்த்துக்கள் கூறவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், “அபிஜித் பானர்ஜி கம்யூனிச சித்தாந்தச் சார்புடையவர். அவருடைய சிந்தனையில் இடதுசாரிகளின் தாக்கம் முழுமையாக உள்ளது” என கூறியுள்ளார்.

மேலும், “நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் சிந்தனை முற்றிலும் இடது சாய்வு கொண்டுள்ளது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அதுமட்டுமல்ல, அபிஜித் பானர்ஜி முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘நியாய்’ என்ற வறுமை ஒழிப்புத் திட்டத்தை ஆதரித்தவர்.

இந்திய மக்கள் அவரது சித்தாந்தத்தை நிராகரித்து விட்டனர். குறிப்பாக இந்தநாட்டு மக்கள் அவரது ஆலோசனையை நிராகரித்து விட்ட பிறகு, அவருடைய கருத்துக்களை நாங்கள் ஏற்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

அமைச்சர் பியூஷ் கோயல் கருத்து பலரும் எதிர்ப்பும் விமர்சனங்களையும் முன்வைக்கின்றனர். இந்நிலையில் பியூஷ் கோயலுக்கு நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி பதில் அளித்துள்ளார். அதில், “நோபல் பரிசு எங்களுக்கு வழங்கப்பட்டதற்கான காரணம் நாங்கள் ஓரளவுக்கு எங்கள் துறையில் வல்லுநர்கள் என்பதால்தான் என்று நான் நினைக்கிறேன்.

அமைச்சர் ‘நியாய்’ திட்டம் குறித்து பேசினார். நான் தனிப்பட்ட முறையில், பல்வேறு விஷயங்களில் பாகுபாடு கொண்டிருக்கலாம். ஆனால் நாட்டு மக்களுக்கு பெரிதும் தேவைப்படும் பொருளாதார விசயத்தை பொறுத்தவரையில், நான் பாகுபாடு அற்றவன்.

யாராவது என்னிடம் கேள்வி கேட்டால்., பதில் சொல்வனே தவிர அவரின் நோக்கங்களை கேள்வி கேட்கமாட்டேன்” என்று பதில் அளித்துள்ளார். மேலும் மக்கள் கையில்களில் பணம் இருந்தால் வளர்ச்சி அடைய முடியும், அப்படி மக்களிடம் பணம் இல்லை என்றால் அவர்கள் பிஸ்கட் வாங்கப் போவதில்லை என்றும், அவ்வாறு வாங்காவிட்டால் பிஸ்கட் கம்பெனி இழுத்து மூடப்பட்டு விடும் என்றும் உதாரணமாகக் குறிப்பிட்டார்