India
பி.எம்.சி வங்கி நடவடிக்கையால் இன்னொரு உயிரிழப்பு... அறுவை சிகிச்சைக்கு பணம் பெறமுடியாமல் முதியவர் மரணம்!
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி இந்தியாவில் செயல்படும் சிறந்த கூட்டுறவு வங்கியாக இருந்தது. ஆனால் கடந்த 6 மாதங்களில் இந்த வங்கி கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, வாராக்கடன் மதிப்பு 4,300 கோடி ரூபாயாக மாறியுள்ளது. அதனால் இந்த வங்கியின் நிர்வாகத் திறனை சரி செய்ய ரிசர்வ் வங்கி கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.
அதாவது, வாடிக்கையாளர்கள் அடுத்த 6 மாதத்திற்கு அதிகபட்சமாக ரூபாய் 1,000 மட்டுமே எடுக்கமுடியும் என உத்தரவிடப்பட்டு பின்னர் 40,000 ஆக அதிகரிக்கப்பட்டது. அதேபோல, புதிதாக எந்தக் கடனும் வழங்கக் கூடாது, டெபாசிட்களும் போடக்கூடாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதனால் வங்கியில் சேமிப்புக் கணக்கு மூலம் பணம் எடுத்து தொழில் செய்துவந்தவர்கள் கடும் சிரமம் அடைந்தனர். இதன் மூலம் பி.எம்.சி கூட்டுறவு வங்கி மீளமுடியாத அளவிற்கு கடந்த மூன்று வாரத்தில் முடங்கியுள்ளது. இந்த வங்கியை நம்பி டெபசிட் செய்தவர்களும் மருத்துவ தேவை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளைத் தீர்க்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
மும்பை முலுண்ட் பகுதியைச் சேர்ந்த 83 வயதான முரளிதர் தர்ரா, பஞ்சாப் மகராஷ்டிரா வங்கியில் 80 லட்சம் ரூபாய் பணம் டெபாசிட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தர்ராவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அறுவை சிகிச்சைக்கு அதிகளவில் பணம் தேவைப்பட்டுள்ளது.
ஆனால் பஞ்சாப் மகராஷ்டிரா வங்கியில் நடைபெற்ற கடன் முறைகேட்டை தொடர்ந்து அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு 40 ஆயிரம் ரூபாய்தான் எடுக்கமுடியும் என்று ரிசர்வ் வங்கி வரம்பு நிர்ணயித்துள்ளதால் அறுவை சிகிச்சைக்கு தேவையாக பணத்தை முரளிதர் தர்ராவால் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கமுடியவில்லை. இதனால் உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மகன் கூறுகையில், ''என் தந்தை பிஎம்சி வங்கியில் 80 லட்சம் வரை பணம் போட்டிருந்தார். அவருக்கு இதயக்கோளாறு இருந்தது. எனவே, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் எனக் கூறினர். ஆகவே வங்கியில் இருந்து பணத்தை எடுத்து சிகிச்சை செய்ய தீர்மானித்தோம். ஆனால், வங்கியிலிருந்து தக்க சமயத்தில் பணத்தை எடுக்க முடியாததால் சிகிச்சை செய்ய முடியவில்லை. இதனால் எனது தந்தை உயிரிழந்தார்'' என்றார்.
முன்னதாக இதேபோல் பணத்தை எடுக்கமுடியாமல் தவித்த வாடிக்கையாளர் ஒருவர், வங்கி நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட பிறகு மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு