India
“ராஜீவ் படுகொலைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” - வைரலாகும் LTTE அறிக்கை!
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, பிரசாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “ராஜீவ்காந்தியை நாங்கள்தான் கொன்றோம்” என்கிற ரீதியில் பேசியது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து, சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சீமானின் பேச்சு, ராஜீவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் எழுவர் விடுதலையில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என எழுவர் விடுதலை ஆதரவாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சீமானின் பேச்சுக்கு மறுப்புத் தெரிவிக்கும் விதமாக, ‘ராஜீவ் காந்தியின் படுகொலைக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் தொடர்பில்லை’ என விளக்கி விடுதலைப் புலிகள் அமைப்பு முன்னர் வெளியிட்ட அறிக்கை தற்போது வைரலாகி வருகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சட்டத்துறை பிரதிநிதி லதன் சுந்தரலிங்கம் மற்றும் அரசியல்துறை பிரதிநிதி குருபரன் குருசாமி ஆகியோரின் பெயரில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை பின்வருமாறு :
“தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழீழ மக்களுக்காக தமிழீழ மக்களால் தமிழீழ மக்களின் பாதுகாப்பிற்காக தோன்றிய இயக்கம். நாங்கள் போராட்டக் குழுவோ, ஆயுதக் குழுவோ, வன்முறை இயக்கமோ அல்ல. மாறாக தமிழீழத்தில் நடந்த அரச வன்முறைகளையும் அரசு ஆதரவு ஆயுதக் குழுக்கள் வன்முறைகளையும் கட்டுப்படுத்தும் இயக்கமாகவே இருந்துள்ளோம்.
எனவே ஆயுத மெளனிப்பிற்குப் பிறகும் இதுவரை எங்கள் கட்டுப்பாடுகளைக் காத்துவந்துள்ளோம். எனினும் எங்கள் மக்களுக்கு இதுவரை எந்த விடிவோ, தீர்வோ கிடைக்கவில்லை. இன்றளவும் எம்மக்கள் திட்டமிட்ட இனவழிப்பிற்கே உட்படுத்தப்படுகிறார்கள். பல முறை தன்னிலை விளக்கம் அளித்தும் ஆதாரங்கள் பலவற்றை எடுத்து விளம்பியும் மீண்டும் மீண்டும் புலிகள்தான் ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்று ஆதாரமில்லாத தவறான கருத்து தொடர்ந்து திணிக்கப்பட்டு வருகிறது.
இது போன்ற தவறான பிரச்சாரத்தால் எம்மக்கள் கையறுநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என அந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது. சிலர் ஒருபடி மேலே சென்று, முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழ் மக்களின் உயிர் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் உயிருக்கு ஈடாகாது என உரைப்பது எவ்வளவு வேதனை தரும் விடயம் என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
இந்திய தலைமையை சீர்குலைக்கும் திட்டமோ இந்தியாவை தாக்கும் திட்டமோ என்றும் புலிகளிடம் இருந்ததில்லை. இலங்கையை சாராத எந்த ஒரு நபருக்கும், தலைவருக்கும் எதிராக நாங்கள் ஒருபோதும் ஆயுதம் ஏந்தவும் இல்லை, திட்டம் தீட்டவும் இல்லை. குறிப்பாக எந்த ஒரு இந்திய தேசியத் தலைவருக்கும் எதிராக செயற்பட நாங்கள் எப்பொழுதும் எண்ணியதில்லை.
எங்கள் ஆயுதங்கள் மௌனித்த பத்து வருடங்களுக்குப் பிறகும் கூட புலிகளையும் தமிழீழ மக்களையும் ராஜீவ்காந்தி கொலையுடன் தொடர்புபடுத்துவதை காணும்பொழுது இந்த கொலை தமிழீழ மக்களை அழிக்க செய்யப்பட்ட சதி திட்டமாகத்தான் எண்ணத் தோன்றுகிறது.
தொடர்ந்து அழிந்து கொண்டிருக்கும் எம் மக்கள் மீது இதுபோன்ற அபாண்டமான குற்றச்சாட்டுகளை இனியும் பதிய வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ராஜீவ்காந்தி படுகொலைக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என முன்பே பலமுறை விடுதலைப் புலிகள் இயக்கம் கூறியிருக்கிறது ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்ந்து சில நாட்களுக்குள் விடுதலை புலிகளின் வெளியுறவு பொறுப்பாளராக இருந்த கிட்டு இப்படுகொலைக்கும் புலிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அறிக்கை வெளியிட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்படும் அபாண்டமான ராஜீவ் காந்தி படுகொலை பழி உடனடியாக துடைத்தெறியப்பட வேண்டும் என்றும் அதனால் புலிகள் மீதான களங்கம் நீங்கும். அதனால் உலக நாடுகள் புலிகள் மீது விதித்துள்ள தடைகள் நீங்கும் என்றும், எமது மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் காலம் கனியும் என்றும் நம்புகிறோம். புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்!”
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அறிக்கை தற்போது மீண்டும் பரவி வருகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!