India

‘6 பேர் கொலைக்கு பயன்பட்ட 2 மதுபாட்டில்களும், 5 ஆயிரம் ரூபாயும்’- கேரள சைக்கோ கொலைகள் பற்றிய புதிய தகவல்!

கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கூடத்தாய் என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் ஜோலி (47). இவர் பெற்றோரின் கட்டாயத்தால் ராய் தாமஸ் என்பவரை பல ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

ராய் தாமஸுடனான திருமண வாழ்வு கசப்பாக இருந்ததால் ஜோலிக்கு தனது கணவரின் பெரியப்பா மகன் சாஜு மீது காதல் ஏற்பட்டுள்ளது. அவரை அடைவதற்கு ராய் தாமஸும் அவரது குடும்பத்தினரும் தடையாக இருப்பதால் அவர்களை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.

ஒரே நேரத்தில் அனைவரையும் கொலை செய்தால் தன் மீது சந்தேகம் வரும் என்பதற்காக 17 ஆண்டுகளாக அடுத்தடுத்து குடும்பத்தில் 6 பேரை கொலை செய்துள்ளார். அதன்படி முதலில் கடந்த 2002ம் ஆண்டு மாமியார் அன்னம்மாவை சூப்பில் சயனைடு வைத்து யாருக்கும் சந்தேகம் வராத வகையில் கொலை செய்துள்ளார்.

இதன்பின்னர் 2008ம் ஆண்டு மாமனாரையும், 2011ம் ஆண்டு கணவர் ராய் தாமஸையும் அதே போல உணவில் சயனைடு கலந்து கொலை செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து 2014ல் மாமியாரின் அண்ணனையும், 2016ல் சாஜுவின் மனைவி சிலி மற்றும் அவர்களது குழந்தையையும் அதே போல கொலை செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து 2017ம் ஆண்டு தான் நினைத்தபடியே சாஜுவை திருமணம் செய்து கொண்டார் ஜோலி. மேலும் சொத்துகளையும் தன் பெயருக்கு மாற்றியுள்ளார். குடும்பத்தில் தொடர்ந்து அனைவரும் மர்மமான முறையில் உயிரிழப்பது குறித்து ராய் தாமஸின் சகோதரர் போலிஸில் புகார் அளித்தார்.

இவர் வெளிநாட்டில் வசித்து வந்ததால் இந்த சம்பவங்களில் இருந்து தப்பியுள்ளார். அவரின் புகாரைத் தொடர்ந்து இறந்தவர்களின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அப்போது பிரேத பரிசோதனையில் சயனைடு கொடுத்து கொல்லப்பட்ட உண்மை வெளிவந்துள்ளது. இதன் பின் போலிஸ் விசாரணையில் ஜோலி 6 பேரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

அவரது கணவர் சாஜு, மற்றும் ஜோலிக்கு சயனைடு வாங்கிக் கொடுத்த இருவரையும் போலிஸார் தற்போது விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் புதுப்புது தகவல்கள் வெளியாகி போலிஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன.

ஜோலிக்கு சயனைடு வாங்கிக் கொடுத்த நகைக்கடை ஊழியர் பிரஜிகுமார் மற்றும் மேத்யூ ஆகியோரையும் கைது செய்த போலிஸார் அவர்களை 6 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சயனைடு வாங்கித் தந்ததற்காக ஜோலி, 2 உயர்ரக மதுபாட்டில்களும், 5 ஆயிரம் பணமும் மட்டுமே தந்ததாக பிரஜிகுமார் வாக்குமூலத்தில் கூறியதாகத் தெரிகிறது.

இதுதவிர, ஜோலி தன்னுடைய கைப்பையில் லிப்ஸ்டிக், கண்ணாடி, சீப்பு ஆகியவற்றுடன் சயனைடு பாட்டிலையும் எப்போதும் உடன் வைத்திருப்பார் என்ற தகவலும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலைகளை எப்படி செய்தேன் என்று ஜோலி நடித்துக் காட்டிய போது, அவர் ஒருபோதும் பதட்டப்படவே இல்லை என்று போலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஜோலியின் செல்போனை போலிஸார் ஆய்வு செய்தபோது பலமுறை அவர் கோவை சென்றிருப்பது தெரியவந்தது. இது பற்றி உறவினர்களிடம் கேட்டபோது, ஆண் நண்பர் ஒருவருடன் அவர் அடிக்கடி கோவைக்குச் சென்று வருவார் என தெரிவித்திருக்கின்றனர். அந்த ஆண் நண்பர் குறித்தும் போலிஸார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விசாரணையில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளிவரும் எனத் தெரிகிறது.