India
“கிரண்பேடிக்கு எதிராக கருப்புக் கொடி” : கருப்புச்சட்டையுடன் களம் இறங்கிய அமைச்சர் - ஏனாமில் பதட்டம்!
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி அம்மாநிலத்தின் ஒரு பகுதியான ஏனாமில் (ஆந்திர மாநிலம்- காக்கிநாடா அருகில் உள்ளது) ஆய்வு செய்வதற்காக நேற்று புதுச்சேரியில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக ஏனாம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், புதுச்சேரி மாநில சுற்றுலா அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணா ராவ், கவர்னர் கிரண்பேடியின் ஆய்வு நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஏனாம் பகுதியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தடை போடும் கிரண்பேடி ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக, முதல்வர் நாராயணசாமி கூறுகையில், “13 வளர்ச்சித் திட்டங்களுக்கு கவர்னர் கிரண்பேடி தடை போட்டுள்ளார். நமது புதுச்சேரி மாநிலத்திற்கு சொந்தமான ஏனாமில் உள்ள 2 தீவுகளை ஆந்திராவுக்கு சொந்தமானது என்று கிரண்பேடி கூறி வருகிறார். ஆய்வு கூட்டங்களை அவர் நடத்தக்கூடாது. ஐகோர்ட் தீர்ப்பை கிரண்பேடி மீறுகிறார்.
மாநிலத்தைப் பொறுத்தவரை அதிகாரிகளை அழைத்து கூட்டம் போடவோ, ஆய்வு நடத்தவோ கிரண்பேடிக்கு அதிகாரம் இல்லை. இதனை மீறி அவர் ஏனாமில் ஆய்வுக்கூட்டம் நடத்தினால் ஜனநாயக ரீதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்” என்று தெரிவித்தார்.
இதனிடையே நேற்று திட்டமிட்டபடி கிரண்பேடி ஏனாம் போய்ச் சேர்ந்தார். மண்டல நிர்வாகி அலுவலகத்தில் தங்கியுள்ள அவர் இன்று காலை 8 மணிக்கு அதிகாரிகளை அழைத்துக் கொண்டு மீனவர் கிராமத்திற்கு ஆய்வுப்பணிக்கு செல்வதாக இருந்தது. ஆனால், அவர் காலை 11 மணி வரை ஆய்வுப்பணிக்கு செல்லவில்லை.
ஏனாம் தெருக்களில் அப்பகுதி மக்களில் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடியேற்றியும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதேபோன்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தனது வீட்டில் கருப்புக் கொடியேற்றி கருப்புச் சட்டையுடன் தெருக்களில் ஊர்வலமாக வந்து கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
கிரண்பேடி தங்கியிருக்கும் மண்டல அதிகாரி அலுவலகம் முன்பும், ஆய்வுப்பணி மேற்கொள்ளும் பகுதிகளிலும் ஏராளமான போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஏனாம் எல்லையில் பாதுகாப்பு கருதி ஆந்திர மாநில போலிஸார் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏனாமில் பெரும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!