India
மோடி-ஜின்பிங் சந்திப்பில் என்னவெல்லாம் விவாதிக்கப்பட்டது? - வெளியுறவுத் துறை செயலர் தகவல்!
இந்திய பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் விஜய கோகலே, இணைச் செயலர் (கிழக்கு ஆசியா ) நவீன் ஸ்ரீவஸ்தவா, அதிகாரப்பூர்வ தொடர்பாளர் ரவிஷ்குமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், “வர்த்தக ரீதியில் இரு நாட்டுக்கும் இடையே முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சீனா மேற்கொள்ளும் என்று சீன அதிபர் உறுதி அளித்தார்.
இரு தலைவர்களின் இரண்டு நாள் பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக இருப்பது இருநாடுகளிடையே வர்த்தகத்தை மேம்படுத்துதல் , அதன் மூலம் பொருளாதாரத்தை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்லுதல் ஆகியவையே முதன்மையாக எடுத்து வைக்கப்பட்டது.
இந்தியாவிலிருந்து பல்வேறு துறைகளில் சீனாவிற்கு முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று சீன அதிபர் தெரிவித்ததாகவும் , எந்தெந்தத் துறைகளில் வர்த்தகம் பற்றாக்குறை இருக்கிறது, எந்தத் துறைகளில் வர்த்தகம் இல்லாத நிலையில் இருக்கிறதோ, அதை உடனடியாகக் கண்டறிந்து அடுத்த கட்டத்திற்கு விரைவாக எடுத்துச் செல்வதே இந்த இரண்டு நாள் பேச்சுவார்த்தையின் நோக்கமாக இருந்தது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மூன்றாவது முறைசாரா உச்சிமாநாட்டை சீனாவில் நடத்துவது என்றும், அதற்கான அழைப்பை சீன அதிபர், பிரதமர் நரேந்திர மோடிக்கு விடுத்தார், அதனை ஏற்றுக்கொண்ட மோடி அடுத்த ஆண்டு சீனாவிற்கு வந்து அந்த நிகழ்வில் கலந்துகொள்வதாக உறுதி அளித்தார்.
இரு தலைவர்களும் ஆறு மணி நேரமாக நேருக்கு நேர் அமர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரு தலைவர்களும் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். பொதுமக்களின் வரவேற்பை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சீன பிரதமரை சந்தித்தது குறித்து பேசப்பட்டது. ஆனால் விரிவாக எதுவும் பேசப்படவில்லை. ஜம்மு காஷ்மீர் தொடர்பான எந்த விஷயத்தையும் இரு தலைவர்களும் ஆலோசிக்கவில்லை. காஷ்மீர் விவகாரத்தைப் பொறுத்தவரை இந்தியா தனது நிலைப்பாட்டை சீனாவிடம் ஏற்கனவே தெரிவித்துவிட்டது.
குறிப்பிட்ட எந்த ஒரு தீவிரவாத இயக்கம் குறித்து பேசப்படவில்லை. ஆனால், சர்வதேச சமுதாயத்திற்கு தீவிரவாதம் அச்சுறுத்தலாக உள்ளது என்கிற அடிப்படையில் பேசப்பட்டது.
இரு நாடுகளும் இணைந்து சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாசில்லாத நாட்டை உருவாக்கும் வகையில் வரைமுறைகள் கொண்டு வரப்படும்.
சர்வதேச அளவில் இறக்குமதி ஏற்றுமதியில், இரு நாட்டிற்கும் இடையே புதிய வரைமுறைகள் கொண்டு வரப்படும். இந்தியா-சீனா இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக சீன துணை பிரதமர் மற்றும் இந்திய நிதி அமைச்சர் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்று இந்த சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சீன மற்றும் இந்திய மக்களிடையே அதிக நெருக்கத்தை ஏற்படுத்தி இந்தியா மற்றும் சீனாவில் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சென்னையில் மகாபலிபுரத்தில் இந்த முறைசாரா சந்திப்பு அமைந்ததற்கு முக்கிய காரணம் நரேந்திர மோடி, சென்னை மகாபலிபுரத்தில் தான் சந்திப்பை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நூற்றாண்டுகளாக தொடரும், சீனா இந்தியாவின் ஒற்றுமையை இந்தச் சந்திப்பு வெளிப்படுத்தும் என்பதற்காக இந்த சந்திப்பு மகாபலிபுரத்தில் ஏற்படுத்தப்பட்டது'' எனத் தெரிவித்தனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!