India

உலக பொருளாதார போட்டித்திறன் குறியீடு - பா.ஜ.க ஆட்சியில் 10 இடங்கள் பின்தங்கிய இந்தியா!

இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு காரணமாக ஆட்டோ மொபைல், உணவு உற்பத்தி உள்ளிட்ட நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி வரி விதிப்பால் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளதால் அசோக் லேலாண்ட், மாருதி, மஹிந்திரா, போஷ் இந்தியா போன்ற பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி வருகின்றன.

மேலும் பங்கு சந்தை தொடர்ந்து சரிவை சந்திக்கிறது. அதனால் அன்னிய முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளை திரும்ப பெறுகின்றனர். ஆனால் இந்த உண்மையை முடிமறைக்கும் வேலையை பாஜக அரசு திட்டமிட்டு செய்துவருகிறது.

குறிப்பாக உலக அளவில் பொருளாதார போட்டித்திறன் குறியீட்டில் இந்தியா முன்பு இருந்த இடத்தில் இருந்து 10 இடங்கள் பின்னடைவை சந்தித்துள்ளது. இதுதொடர்பான விவரங்களை உலக பொருளாதார கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

ஜெனிவாவில் அமைந்துள்ள உலக பொருளாதார கூட்டமைப்பு அண்மையில் உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பொருளாதார போட்டித்திறன் குறியீடு சம்பந்தமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், பிரிக்ஸ் நாடுகளின் பட்டியலில் மிக மோசமான நிலையில் பிரேசில் உள்ளதாகவும், பொருளாதார போட்டித்திறன் குறியீட்டில் 71 வது இடத்தில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். அதனையடுத்து அதிக போட்டித்திறனில் முன்னிலை பெற்ற நாடாக சிங்கப்பூர் உள்ளதாகவும், அதுவும் முதல் இடத்தைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதனையடுத்து அமெரிக்கா 2-வது இடத்திலும், ஹாங்காங் 3-வது இடத்திலும், நெதர்லாந்து 4-வது இடத்திலும், சுவிட்சர்லாந்து 5-வது இடத்திலும் உள்ளது. பல நாடுகள் தங்களில் குறியீட்டை விட்டுக்கொடுக்காமல் அதே இடத்தில் உள்ளனர்.

இந்நிலையில், இந்தியா கடந்தாண்டு 62 புள்ளிகளுடன் 58-வது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது 10 இடங்களுக்கு சரிந்து 68-வது இடத்தில் உள்ளது. கிட்டத்தக்க ஒரு ஆண்டில் 10 இடங்கள் சரிவு என்பது மிகப் பெரிய பொருளாதார பின்னடைவு என கணிக்கப்படுகிறது.

அதே சமயம், உலகம் முழுவதும் சுகாதாரமான வாழ்க்கை தரம் கொண்ட 141 நாடுகளில், இந்தியா 109-வது இடத்தில் உள்ளது. அதேப்போல் திறன் மேம்பாட்டில் 107-வது இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதில் மற்றொரு அதிர்ச்சி தகவல் என்னவென்றால் திறன் மேம்பாட்டில் இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்களை 84-வது இடத்திலும், வங்கதேசம் 105-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.