India

“இஸ்ரோ விஞ்ஞானி என ஏமாற்றி என்னை திருமணம் செய்தார்” : கணவர் மீது பி.ஹெச்டி மாணவி போலிஸில் புகார்!

டெல்லியைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி ஒருவருக்கு, ஜிதேந்தர் சிங் என்ற இளைஞருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. துவாரகா பகுதியைச் சேர்ந்த ஜிதேந்தர சிங், தான் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் ஒரு பிரிவில் விஞ்ஞானியாகப் பணியாற்றுவதாக கூறியுள்ளார்.

அத்துடன், போலியாக அச்சிட்டு வைத்திருந்த இஸ்ரோ விஞ்ஞானி அடையாள அட்டையும் காண்பித்துள்ளார். இதனையடுத்து, ஜிதேந்தர சிங்கும் அந்த பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் குடும்பத்தினர் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

மேலும், காதல் கணவர் ஒரு விஞ்ஞானி என நண்பர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே தெரிவித்து வந்த அந்தப் பெண்ணுக்கு, திருமணம் நடந்த சில மாதங்களிலேயே ஜிதேந்தர் சிங் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, பணி குறித்து கேள்வி எழுப்பியபோது ஜிதேந்தர் சிங் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். அதன் பிறகு குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்து குடும்ப உறுப்பினர்கள் விசாரித்தபோது ஜிதேந்தர சிங் விஞ்ஞானி இல்லை என்றும், வேலையில்லாமல் இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி, ஜிதேந்தர சிங்கிற்கு ஏற்கவே ஒரு திருமணம் ஆனதும் தெரியவந்தது. அவரையும் ஏமாற்றி திருமணம் செய்துக்கொண்டதை கண்டிபிடித்துள்ளனர். இதனையடுத்து, அந்தப் பெண், தன்னை ஏமாற்றியதாகக் கூறி, அவரது குடும்பத்தினருடன் துவாரகா பகுதி போலிஸில் புகார் கொடுத்தனர்.

போலிஸார் ஜிதேந்தர சிங்கை பிடித்து விசாரித்து வருகின்றனர். அவர் மேலும் யாரையாவது இதுபோல ஏமாற்றி திருமணம் செய்துகொண்டாரா என்கிற கோணத்தில் போலிஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருமணமான பெண் மற்றும் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.