India

ஜிப்மர், எய்ம்ஸ் என எந்தக் கல்லூரியாக இருந்தாலும் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை - அடுத்த ஆண்டு அமல்?

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு எழுதுவதை மத்திய பா.ஜ.க அரசு கட்டாயமாக்கியது. இதனால் நாடு முழுவதும் நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.

ஆனால், மத்திய அரசுக்கு சொந்தமான எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்லூரி ஆகியவற்றுக்கு மட்டும் தனியாக நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள 15 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் 1,500 மருத்துவ இடங்கள் உள்ளன. ஜிப்மரில் 200 மருத்துவ இடங்கள் உள்ளன.

இந்த கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் தனியாக நுழைவுத் தேர்வு நடத்துவது அதிக செலவையும், பல்வேறு நடைமுறை சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது. எனவே நீட் தேர்வு மூலமே இந்த மாணவர்களையும் தேர்வு செய்யலாமா என மத்திய சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டது.

இதில் அந்த கல்லூரிகளுக்கும் நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்ற முடிவுக்கு மத்திய சுகாதாரத்துறை வந்துள்ளது. எனவே அடுத்து ஆண்டு முதல் எய்ம்ஸ், ஜிப்மர் நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு நீட் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.