India

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் கம்ப்யூட்டரில் இருந்து முக்கிய ஆவணங்கள் திருட்டு? - போலிஸார் விசாரணை!

பா.ஜ.க.வை சேர்ந்த பியூஷ் கோயல் மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். இவரது வீடு, தெற்கு மும்பையில் உள்ள நேப்பியன் கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. இவரது மனைவி கடந்த மாதம் 19ம் தேதி வெளியூர் சென்றிருந்தார்.

வெளியூரிலிருந்து திரும்பிய அவர் வீட்டில் வெள்ளிப் பாத்திரங்கள், சில பழமையான பொருட்கள் மற்றும் துணிமணிகள் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் இருந்த கம்ப்யூட்டரில் சேமிக்கப்பட்டு இருந்த சில தகவல்கள் இமெயில் மூலமாக அடையாளம் தெரியாத நபர்களுக்கு அந்த கம்ப்யூட்டரில் இருந்தே அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவத்திற்கு பிறகு அவரது வீட்டில் வேலை செய்து வந்த விஷ்ணு குமார் என்பவரையும் காணவில்லை. இதுகுறித்து அமைச்சர் குடும்பத்தினர் போலிஸில் புகார் செய்தனர். பியூஷ் கோயலின் மனைவி அளித்த புகாரின் பேரில், அங்கு வேலை செய்த விஷ்ணு குமாரை காவலர்கள் கைது செய்தனர்.

பின்னர் நடைபெற்ற விசாரணையில், தான் பொருள்களைத் திருடியதை ஒப்புக்கொண்டார். விஷ்ணு, அமைச்சரின் கம்ப்பூட்டரில் இருந்து சில தகவல்களைத் திருடி, யாரோ ஒருவருக்கு இ-மெயில் மூலம் அனுப்பியுள்ளார் என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.

ஆனால், என்ன தகவல் யாருக்கு அனுப்பப்பட்டது போன்ற விவரம் தெரியவில்லை. விவரங்களைக் கண்டறியும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அமைச்சரின் தனிப்பட்ட கம்ப்பூட்டரில் இருந்து, சில அரசு சார்ந்த முக்கிய ஆவணங்களைத் திருடியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.