India

ஆர்.பி.ஐ நடவடிக்கைக்கு முன் வெளியேறிய பெரும் தொகை : பி.எம்.சி வங்கி முடக்கத்திற்கு இதுதான் காரணமா?

பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி இந்தியாவில் செயல்படும் சிறந்த கூட்டுறவு வங்கியாக இருந்தது. ஆனால் கடந்த 6 மாதங்களில் இந்த வங்கி கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, வாராக்கடன் மதிப்பு 4,300 கோடி ரூபாயாக மாறியுள்ளது. அதனால் இந்த வங்கியின் நிர்வாகத் திறனை சரி செய்ய ரிசர்வ் வங்கி கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

அதாவது, வாடிக்கையாளர்கள் அடுத்த 6 மாதத்திற்கு அதிகபட்சமாக ரூபாய் 1,000 மட்டுமே எடுக்கமுடியும் என உத்தரவிடப்பட்டு பின்னர் 10,000 ஆக அதிகரிக்கப்பட்டது. அதேபோல, புதிதாக எந்தக் கடனும் வழங்கக் கூடாது, டெபாசிட்களும் போடக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனால் வங்கியில் சிறு சேமிப்பு மூலம் பணம் எடுத்து தொழில் செய்துவந்தவர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

இதன் மூலம் பி.எம்.சி கூட்டுறவு வங்கி மீளமுடியாத அளவிற்கு கடந்த மூன்று வாரத்தில் முடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த நிலைமைக்கு முன்னதாகவே மிகப்பெரிய வைப்பு நிதி பெரிய அளவில் வெளியேறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வங்கிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட இருக்கும் நடவடிக்கை தெரிந்தே இந்த பெரிய அளவு தொகையை எடுத்திருக்கலாம் எனவும் கணிக்கப்படுகிறது.

உண்மைகளை வெளிக்கொணரும் அமைப்பு இதனை கணித்து அதுதொடர்பான தகவல் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் வங்கியின் செயல்படாத சொத்துகள் குறித்து வந்த தவறான தகவலே முதல் காரணம் எனக் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, முடக்கப்பட்ட எச்.டி.ஐ.எல் நிறுவனம், வங்கிக்கு சுமார் 6,500 கோடி ரூபாய் கடன்பட்டுள்ளது. அதன் மதிப்பு மொத்த கடன் மதிப்பில் 73 சதவிகிதம் ஆகும். இந்த தொகைக்காக இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.டி ஜாய் தாமஸ் ரிசர்வ் வங்கியில் அனுமதி பெற்றார் என்றும் கூறப்படுகிறது.

மேலும், பி.எம்.சி வங்கியைப் பொறுத்தவரையில், சிறிய வைப்புத் தொகையாளர்கள் அதன் மொத்த வைப்புத் தொகையாளர்களில் மூன்றில் இரண்டு பங்கில் உள்ளனர். இந்நிலையில், ஆரம்ப நிலை ஆய்வில், சில கணக்குகளுக்கு பெருமளவில் டெபாசிட் தொகை சென்றுள்ளதை ரிசர்வ் வங்கி கண்டறிந்துள்ளது. அதனை திரும்பப் பெரும் நடவடிக்கை என்பது முடியாத காரியம் என்பதால் கடும் நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த பெரிய அளவிலான தொகை வெளியேறியது குறித்து ரிசர்வ் வங்கியின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்கவில்லை என்றும், பி.எம்.சி வங்கி நிர்வாகியையும் அணுக முடியவில்லை என்றும் அந்தக் குழு தெரிவித்துள்ளது. குறிப்பாக, இந்த பெரிய வைப்புத் தொகையை எடுத்தவர்கள் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே அதாவது செப்டம்பர் 17ம் தேதியே எடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.