India
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஒரு வாய்ப்பு: அவசர தேவைக்கு உடனடி வங்கிக்கடன்- மத்திய அரசு அறிவிப்பு!
மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடும் சரிவைச் சந்தித்தன. இந்நிலையில் ஜி.எஸ்.டி வரி வசூல் முறையை அமல்படுத்தி அவர்களை கடும் நெருக்கடியில் சிக்க வைத்தது. தொடர்ச்சியான பொருளாதார மந்த நிலை தற்போது கடும் வீழ்ச்சியாக மாறியுள்ளது.
வழக்கமாக அளிக்கப்படும் போனஸ் ஊதியம் இந்த முறை வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முழுமையாக வேலையே இல்லாமல் தொழில் முடங்கி சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் சிக்கித் தவிக்கும் செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
பண்டிகை காலங்களில் வங்கிகளில் உடனடி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்திருந்தாரே, அதனை செயல்படுத்த வேண்டும் எனப் பலரும் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதற்கிடையே, சமீபத்தில் பொதுத்துறை வங்கிகளின் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், 400 மாவட்டங்களை அடையாளம் கண்டு கடன் வழங்குவது மற்றும் இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. பின்னர் தனியார் வங்கிகளும் இந்தத் திட்டத்தில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்தன.
இந்நிலையில், இந்த மாதம் முழுவதும் பண்டிகைகள் நெருங்கி வருவதால் முதற்கட்டமாக நாடு முழுவதும், சுமார் 250 மாவட்டங்களில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க முன்வந்துள்ளனர்.
அதன்படி அந்த கடன் தொகையை வழங்க பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி உள்பட அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் முடிவு செய்துள்ளன. இன்று (03.10.2019) முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு கடன் வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த கடன் வழங்கும் திட்டம் பண்டிகை காலங்களில் வர்த்தக நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் வழங்குவதில் அனைத்து நிதி தொடர்பான எச்சரிக்கை விதிகளும், விழிப்புணர்வு நடவடிக்கைகளும் வங்கிகளால் பின்பற்றப்படும் எனக் கூறப்படுகிறது.
மேலும், இந்த கடன் வழங்கும் முறை குறித்து வர்த்தகர்கள் தெரிந்துகொள்வதற்காக உள்ளூர் வர்த்தக சங்கங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வர்த்தக சபைகள் மூலம் தகவல் அனுப்பப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, இரண்டாவது கட்டமாக இந்த உடனடி கடன் வழங்கும் திட்டம் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக 150 மாவட்டங்களில் வருகிற 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!