India
புதுச்சேரி வரை கிளைபரப்பிய தமிழ்நாடு போலிஸின் மாவுக்கட்டு ஸ்டைல்: போலிஸாரை தாக்கிய ரவுடிக்கு மாவுக்கட்டு!
புதுச்சேரியில் தினந்தோறும் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால், அம்மாநில மக்களுக்கு நித்தமும் கத்தி மேல் நடப்பது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது.
பல்வேறு குற்றச் சம்பவங்களில் ரவுடிகள் ஈடுபடுவதை காவல்துறையினரும் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். இதனால் ரவுடிகளும் சுதந்திரமாக திரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி காவல்துறைக்கு புதிய டிஜிபியாக பாலாஜி ஸ்ரீவத்சவா என்பவர் பொறுப்பேற்றுள்ளார். வந்த வேகத்தில் ரவுடிகளின் கொட்டத்தை அடக்குவதற்காக புதுச்சேரியில் முக்கிய ரவுடிகளின் பட்டியலில் உள்ளவர்களை கண்காணிக்கச் சொல்லி உத்தரவிட்டிருந்தார்.
இவ்வாறு இருக்கையில், நேற்று கரிக்கலாம்பாக்கம் காவலர்களான சிவகுருவும், மைக்கேலும் அந்த பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கத்தியுடன் ரவுடிகள் அட்டகாசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக தகவல் வந்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு போலிஸார் விரைந்துள்ளனர்.
அப்போது, சிதம்பரம் பெட்ரோல் பங்க் ஊழியர்களை தங்களிடம் இருந்த கத்தியால் குத்தியும், பணத்தை கொள்ளையடித்தும் சென்றிருக்கிறார்கள் ஜோசப், அய்யனார், அருணாச்சலம் ஆகிய ரவுடிகள்.
இதில், முக்கிய ரவுடியான ஜோசப்பை மடக்கிப் பிடித்த காவலர்கள் அவனை பைக்கில் ஏற்றி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர். அதற்கிடையில் தப்பியோடிய மற்ற ரவுடிகள் இருவரும் காவலர்கள் சென்ற பைக்கை வழிமறித்ததும், இதனை பயன்படுத்தி ஜோசப் போலிஸார் இருவரையும் சரமாரியாக கத்தியால் தாக்கிவிட்டு தனது கூட்டாளிகளுடன் தப்பியோடியுள்ளான்.
இந்த நிகழ்வைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் தாக்குதலுக்குள்ளான காவலர்களை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பின்னர், போலிஸாரை தாக்கிவிட்டு தப்பியோடிய ரவுடிகள் மூவர் மீதும் கொலை முயற்சி, காவலரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். அதில், ரவுடி ஜோசப் கண்டமங்கலத்தை அடுத்த ஆலமரத்து குப்பத்தில் பதுங்கியுள்ளதை அறிந்த போலிஸார் அவரைச் சுற்றி வளைத்தபோது மீண்டும் தப்பியோடியுள்ளான்.
ஜோசப் ஓடுகையில் கீழே விழுந்ததில், அவனது இடது காலிலும், வலது கையிலும் முறிவு ஏற்பட்டுள்ளது. உடனே கதிர்காமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜோசப்புக்கு மாவுக்கட்டு போட்டு கரிசனம் காட்டியுள்ளனர்.
புதுச்சேரி போலிஸாருக்கு இருந்துவந்த நீண்ட நாள் கனவு புதிதாக பொறுப்பேற்ற டிஜிபியின் மூலம் நிறைவேறியுள்ளதை உணர்த்தும் வகையில் மாவுக்கட்டு போட்டுள்ள ரவுடி ஜோசப்பின் புகைப்படத்தை இளம் போலிஸார் பலர் அவர்களின் வாட்ஸ்-அப் டிபியாக வைத்துள்ளனர்.
மேலும், தப்பியோடிய இரண்டு ரவுடிகளையும் போலிஸார் வலைவீசி வருகின்றனர். ரவுடிக்கு மாவுக்கட்டு போடப்பட்ட விவகாரம் மக்கள் மத்தியில் விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?