India

இனி கோயில்களில் ஆடு, கோழி பலியிடக் கூடாது : திரிபுரா உயர்நீதிமன்றம் உத்தரவு!

திரிபுராவில் திரிபுரேஸ்வரி கோவில் என்ற பிரபலமான கோவில் ஒன்று உள்ளது. இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்துசெல்கின்றனர். அங்கு தினமும் ஆடு, கோழி பலியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்தக் கோயிலுக்கு தினமும் ஒரு ஆட்டை பலிகொடுப்பதற்காக மாநில அரசே ஆடு வழங்கி வந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் சுபாஷ் சாட்டர்ஜி என்பவர் திரிபுரா நீதிமன்றத்தில் வழக்குத் கொடுத்தார். அவரது வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டது.

அதன்படி, நேற்றைய தினம் இந்த வழக்கு நீதிபதி சஞ்சய் கரோல் மற்றும் நீதிபதி அரிந்தம் லோத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கோயில் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், “கோயில்களில் விலங்குகளை பலியிடும் நடைமுறை சுதந்திரத்திற்கு முன்பிருந்தே பின்பற்றப்படுகிறது. அதனால் அந்த நடைமுறையை நிறுத்தக்கூடாது” என வாதிட்டார்.

பின்னர் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், “இந்த வழக்கங்களைப் பின்பற்ற அரசு பணம் கொடுக்கவேண்டும் என இந்திய சட்டத்தில் இல்லை. இதுபோன்ற செயல்களைத் தடுக்கதான் அரசு செயல்படவேண்டுமே தவிர, உயிர்பலியை அனுமதிக்ககூடாது” என கண்டிப்புடன் கூறினர்.

மேலும், “இனி திரிபுராவில் எந்த இந்து கோயிலும் இதுபோல ஆடு, கோழிகளைப் பலியிடக்கூடாது. நேர்த்திக்கடன் என்றால் விலங்குகளை கோயிலுக்கு உயிரோடு தத்துக்கொடுக்கலாம். ஆனால் பலியிட அனுமதி இல்லை. இதனை மாநில உள்துறைச் செயலாளர் கண்டிப்பாக பின்பற்றவேண்டும்” என்று உத்தவிட்டனர்.

அதுமட்டுமின்றி, அனைத்து முக்கியமான கோயில்களிலும் கண்காணிப்புக் கேமரா பொருத்தி இதனைக் கண்காணிக்க வேண்டும் எனவும் மாவட்ட போலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் இந்தத் தீர்ப்பு, பழங்குடியின மக்களுக்கு எதிராக எடுத்திருக்கும் நடவடிக்கை என்றும் இது சிறு தெய்வ வழிபாட்டு முறையை நசுக்கி இந்து சடங்குகளை கடைபிடிக்கவைக்கும் முயற்சி என்றும் பழங்குடியின மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.