India

“முதலில் வாராக்கடனை வசூலியுங்கள்” - பொருளாதாரத்தை மீட்க அரசுக்கு ஐடியா கொடுத்த வங்கி ஊழியர்கள் சங்கம்!

இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை மறைப்பதற்காக வங்கிகள் இணைப்பு என்ற திட்டத்தை மத்திய பா.ஜ.க அரசு கையில் எடுத்துள்ளது. இந்த முடிவுக்கு வங்கி ஊழியர்கள், பொதுச் சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இடையே பல்வேறு வகையிலும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் 40வது பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம், மத்திய அரசின் வங்கிகள் இணைக்கும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும், வங்கிகள் இணைப்பை விட்டுவிட்டு வாராக்கடனை வசூலிப்பதில் நடவடிக்கை எடுக்கவேண்டும். வங்கிகள் வாராக்கடனை வசூலிக்க இந்த இணைப்பு திட்டம் உதவாது என்றார்.

மேலும், “வங்கிகள் இணைப்பு நடவடிக்கையால் 50ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த வங்கிகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. வாராக்கடன் மட்டும் ஏறத்தாழ 3 லட்சத்து 13 ஆயிரம் கோடியாக உள்ளது. அதை வசூலித்தாலே பொருளாதார சீர்கேடு ஏற்படாது.

விவசாயிகள், பெண்கள், மாணவர்கள் என தேவைப்படுவோருக்கு கடன் கொடுக்கும் பட்சத்தில் பொருளாதார மந்தநிலையை மீட்டெடுக்க முடியும்.

மேலும் மத்திய அரசின் வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை எதிர்த்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் அக்டோபர் 22ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.