India
பா.ஜ.க அரசின் போக்குவரத்து அபராதத்தை குறைக்க கேரள அரசு முடிவு : பினராயி விஜயன் துணிச்சல்!
புதிய மோட்டார் வாகன சட்டப்படி, பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிக அளவில் விபத்துகள் ஏற்படுவதால் அதனை கட்டுப்படுத்தவும், உயிரிழப்புகளை தடுக்கவும், பழைய சட்டத்தில் சில முக்கிய திருத்தத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கான திருத்த மசோதா, அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, 2019 மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தில் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், லைசென்ஸ் காலாவதியாகிவிட்டால் ஒரு மாதத்திற்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை ஒரு ஆண்டாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், போக்குவரத்து விதிகளை மீறும் நபருக்கு அபராதக் கட்டணம் முன்பு இருந்ததைவிட பன்மடங்கு அபராதம் விதிப்பது போன்றவை புதிய மோட்டார் வாகனச் சட்டத்திருத்தத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில், செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட நிலையில், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், தமிழகம் உட்பட 6 மாநிலங்கள், மத்திய அரசின் இந்த உத்தரவை அமல்படுத்துவதை நிறுத்தி வைத்துள்ளன. ஆனால் கேரளாவில் 1ம் தேதி முதல் புதிய அபராத தொகை வசூலிப்பது அமல்படுத்தப்பட்டது.
அதனால் இந்த உத்தரவை எதிர்த்து கேரள மக்களுக்கும் போலிஸாருக்கும் இடையே பல இடங்களில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகமாக வசூல் செய்யும் இந்த அபராத தொகை நிறுத்தி வைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கோடியேறி பாலகிருஷ்ணன், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா உட்பட பலர் கேரள அரசுக்கு கோரிக்கை் விடுத்தனர்.
இதனையடுத்து முதல்வர் பினராயி விஜயன், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் கூடுதல் அபராத தொகை வசூலிப்பதால் போக்குவரத்து போலிஸாருக்கும் பொதுமக்களுக்குமான மோதல் போக்கு அதிகரிக்கிறது.
எனவே, தற்போதைக்கு அபராத தொகை வசூலிப்பதை நிறுத்திவைக்க தீர்மானிக்கப்பட்டது. மேலும் ஓணம் பண்டிகை முடியும் வரை வாகன சோதனையில் அதிக தீவிரம் காட்ட வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.
ஒரு வாரத்துக்கு பின்னர், ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதன் பின்பும் கேரளாவில் இந்த சட்டத்தை நிறுத்திவைக்கவோ அல்லது திருத்தங்களுடன் அபாரத தொகையை குறைத்து அமல்படுத்தவோ வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!