India

“விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை; ஆனால்...” : இஸ்ரோ அறிவிப்பு!

நிலவைப் பற்றி ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் விண்ணுக்கு அனுப்பியது. பல்வேறு வட்டப்பாதை நிலைகள் மாற்றப்பட்டு நிலவின் தென்துருவப் பகுதியில் நிலைகொள்ளச்செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆர்பிட்டரில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிலவில் தரை இறங்க முயன்றது.

நிலவில் இருந்து 2.1 கி.மீ தொலைவில் இருந்தபோது, விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோவுக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது விஞ்ஞானிகளுக்கும், நாட்டு மக்களுக்கும் பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

விக்ரம் லேண்டர் என்ன ஆனது எனத் தெரியாததால் அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, நிலவைச் சுற்றி வரும் ஆர்பிட்டர் எடுத்து அனுப்பிய புகைப்படம் மூலம் விக்ரம் லேண்டர் சேதமடையாமல் ஒரு பக்கமாக சாய்வாக இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தியில், “சந்திரயான் 2 ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டர் கண்டறியப்பட்டது. ஆனால், தற்போது வரை விக்ரம் லேண்டருடனான தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியவில்ல. தொடர்ந்து, விக்ரம் லேண்டருடனான தகவல் தொடர்பை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.