India
‘தலித்’ என்றால் தீண்டத்தகாதவர்களா ? : பாடப் புத்தகத்தின் வழி குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கும் பா.ஜ.க !
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கேந்திரிய வித்யாலயாவின் 6ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் குறிப்பிட்ட ஒரு பக்கம் சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. அதில், தலித் என்றால் யார் என்ற கேள்விக்கு சரியான பதில் ''தீண்டத்தகாதவர்கள்'' என்று கொடுக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல, பொதுவாக முஸ்லிம்களின் பண்பு என்ன என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அந்தக் கேள்விக்கு 1) முஸ்லிம்கள் பெண்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள், 2) அவர்கள் சைவ உணவு பழக்கத்தினர், 3) அவர்கள் நோன்பு இருக்கும் காலங்களில் எப்போதும் தூங்குவதில்லை, 4) இவையனைத்தும் என நான்கு தெரிவுகள் கொடுக்கப்பட்டிருந்தன.
மேலும், டாக்டர் அம்பேத்கர் எந்தச் சமூக வகுப்பைச் சேர்ந்தவர் என்னும் கேள்விக்கு சரியான பதில் ''தலித்'' என்று கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு சமூகவலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாடப் புத்தகத்தில் இப்படி இடம்பெற்றுள்ளதாகக் கூறுவது உண்மையல்ல என்றும் சிலர் சொல்லிவந்தனர்.
இதுகுறித்துப் பேசிய கேந்திரிய வித்யாலயா சென்னை மண்டல நிர்வாகிகள், ''குறிப்பிட்ட அந்தப் பக்கம் 6ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் உள்ளது உண்மைதான். ஆனால், இது கேந்திரிய வித்யாலயாவில் மட்டும் பயன்படுத்தும் புத்தகம் கிடையாது. அகில இந்திய அளவில் பல்வேறு சி.பி.எஸ்.இ பள்ளிகளிலும் இந்தப் பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது'' எனத் தெரிவித்தனர்.
மேலும் சி.பி.எஸ்.இ 6ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் வேற்றுமை மற்றும் பாகுபாடு (Diversity and Discrimination) என்ற தலைப்பில் உள்ள பாடத்தில், ''தலித் என்ற வார்த்தையை தாழ்ந்த சாதியைச் சேர்ந்த மக்கள் தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்வர். அவர்கள் 'தீண்டத்தகாதவர்கள்' என்ற வார்த்தையை விரும்புகிறார்கள். இவர்களை அரசாங்கம் பட்டியிலன மக்கள் என அழைக்கும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முஸ்லிம்கள் குறித்தும் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதே நேரம் அம்பேத்கர் தலித் தலைவர் என்று அவரை ஒரு சாரருக்கான தலைவராகக் குறிக்கும் வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.
குழந்தைகளின் மத்தியில் சாதி மத ரீதியான பிரிவினையை தூண்டும் விதமாக இப்பாடத்திட்டம் உள்ளதென கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். பிஞ்சுகளின் மனதில் சாதிய கருத்துகளை விதைக்கும் இந்தப் பாடத்திட்டத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!