India

சந்திரயான் 2 ஆராய்ச்சிக்காக ஒரு ரூபாய் கூட பெறாமல் உதவிய நாமக்கல் மக்கள் : ஆச்சர்ய தகவல்!

நிலவின் தென் துருவத்தின் கடினமான பகுதியில் ஆய்வு செய்வதென்பது சாதாரண நிகழ்வு அல்ல. நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியதில் வேண்டுமானால் இந்தியா 4வது இடத்தில் இருக்கலாம். ஆனால் அதன் தென் துருவப்பகுதிக்கு விண்கலத்தை அனுப்பிய முதல் நாடு இந்தியாதான்.

ஆதலால், நிலவில் சந்திரயான் 2வின் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வு நாடு முழுவதும் உற்றுநோக்கப்பட்டது. இருப்பினும் நிலவை நெருங்கும் சமயத்தில் சில தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதன் காரணமாக லேண்டரின் நிலை குறித்து அறியமுடியாமல் போனதாக இஸ்ரோ அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முன்னதாக, சந்திரயான் 2 நிலவில் இறங்குவது போல பூமியிலேயே நிலவு போன்று அமைத்து ஆராய்ச்சிக் கூடத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. நிலவில் இருப்பது போன்று ஈர்ப்பு விசை, வாயுக்களின் அளவை அமைத்து விக்ரம் லேண்டர் ஒழுங்காக தரையிறங்குகிறதா என சோதனை செய்யப்பட்டது.

இதற்காக நிலவில் உள்ளது போல் தரை அமைப்பு அமைக்கப்பட்டு அங்குள்ளது போன்று மண் ஆகியவை பயன்படுத்தப்பட்டது. சந்திரயான் 1 விண்கலம் செலுத்தப்படுவதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட சோதனைக்காக நாசாவிடம் 10 கிலோ மண்ணை வாங்கியது இஸ்ரோ. நாசாவிடம் இருந்து வாங்கிய 1 கிலோ மண்ணின் விலை 150 டாலராகும்.

தற்போது சந்திரயான் 2க்கு 60 கிலோ மண் தேவைப்பட்டதால் நாசாவிடம் மண்ணை இஸ்ரோ வாங்கவில்லை. மாறாக தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராமங்களில் இருந்து இஸ்ரோ மண் வாங்கியுள்ளது.

நாமக்கல்லின் சிட்டாம்பூண்டி, குன்னமலை ஆகிய கிராமங்களில் உள்ள பாறைகளை வாங்கி சேலத்தில் உள்ள தொழிற்சாலையில் அதனை தூளாக்கி மண்ணாக பெற்றுள்ளது இஸ்ரோ. தமிழக கிராமங்களில் இருந்து வாங்கப்பட்ட மண்ணே சந்திரயான் 2 திட்டத்தின் சோதனைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையிலேயே சந்திரயான் 2 விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இதில் ஆச்சர்யமான தகவல் என்னவென்றால், ஆராய்ச்சிக்காக இஸ்ரோவுக்கு அளிக்கப்பட்ட மண்ணுக்கு அவ்விரு கிராம மக்களும் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. நாட்டின் வளர்ச்சிக்காக தங்களுடைய பங்கு இருப்பதே போதும் என நெகிழ்ச்சியாக தெரிவித்திருக்கிறார்கள்.