India

“மசாலா தூளில் கலப்படமா ?” - வதந்திகளை நம்பவேண்டாம் என ஆச்சி மசாலா விளக்கம்!

மசாலா தூள் விற்பனையில் முன்னிலை வகிக்கும் ஆச்சி மசாலா நிறுவனத்தின் மீது கலப்பட புகார் எழுந்தது.

கேரளாவின் திருச்சூரில் உள்ள கடை ஒன்றில் இருந்து ஆச்சி மசாலா பொருட்களை கைப்பற்றி அம்மாநில உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்துள்ளனர்.

அதில் புரோனோபோஸ் என்ற பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அம்மாநிலத்தில் ஆச்சி மசாலா பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டதாக செய்தி வெளியானது.

இந்த நிலையில், ஆச்சி மசாலா பொருட்கள் குறித்து வெளியான செய்தியில் உண்மை இல்லை எனவும், அது முற்றிலும் வதந்தி எனவும் குறிப்பிட்டு அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், ஆச்சி மசாலா நிறுவனத்தைப் பற்றி வதந்தி ஒன்று வேகமாக பரவி வருகிறது. இது முழுக்க முழுக்க தவறான தகவலாகும். இதனை யாரும் நம்ப வேண்டாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஆச்சி மசாலா பொருட்கள் அனைத்தும் இயற்கை குணம் அழியாமல் இயற்கையான முறையிலேயே காய வைத்து அரைத்து விநியோகிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேபாளம் உள்ளிட்ட சில நாடுகளில் ஆச்சி மசாலா பொருட்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.