India

பைலட் தேர்வில் செல்போன் பயன்படுத்திய நபருக்கு வாழ்நாள் தடை : DGCA அதிரடி உத்தரவு!

விமானி உரிமம் பெறுவதற்கான தேர்வில் செல்போன் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஒருவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) இது தொடர்பான உத்தரவை வெளியிட்டுள்ளது. விதிமுறைகளின்படி தேர்வின்போது மின்னணு கருவிகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லாத நிலையில், கடந்த ஜூலை 16ம் தேதி மும்பையைச் சேர்ந்த மெஹபூப் சம்தானி மும்தாஸ் கான் என்பவர் விமான போக்குவரத்து விதிமுறைகள் பாடத் தேர்வின்போது ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தியுள்ளார்.

அவர் இரண்டு ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஒரு இணைப்புக் கருவியை வைத்திருந்ததாகவும், அவர் முறைகேட்டில் ஈடுபட்டது சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் உறுதிசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து அவர் அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்றும், விமானியாக விரும்பும் ஒருவர் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவது விமான இயக்கப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் என்றும் தெரிவித்து அவருக்கு வாழ்நாள் முழுதும் இந்தத் தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதே போல கடந்த ஜூலை 24 அன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற தேர்வில் குண்டூரை சேர்ந்த ஒருவர் தேர்வுக்கு மொபைல் போன் எடுத்து வந்ததால், அவருக்கு 2 ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.