India
தொடர்ந்து ‘பப்ஜி’ கேம் விளையாடிய இளைஞருக்கு பக்கவாதம் : விபரீதம் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!
உடல்நலத்தில் கவனம் செலுத்தாமல் தொடர்ந்து நீண்ட நேரத்திற்கு ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்குவது பல்வேறு பிரச்னைகளையும் ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், ‘பப்ஜி’ விளையாடி ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
ஐதராபாத்தைச் சேர்ந்த வனபர்தி எனும் 19 வயது இளைஞர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி திடீரென பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அவரது வலது காலும், வலது கையும் திடீரென செயல்படாமல் போனதால் உடனடியாக அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மூளையில் ஏற்பட்ட ரத்த ஓட்டத் தடையால் பக்கவாதம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். விரிவான மருத்துவ அறிக்கை மூலம், அந்த இளைஞர் தொடர்ந்து பப்ஜி விளையாடி வந்ததே பக்கவாதத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, அந்த இளைஞரின் தாய், “நாள்தோறும் 10 மணி நேரம் வரை பப்ஜி கேம் விளையாடுவான்; பகுதிநேர வேலையாக அதிகாலையில் செய்தித்தாள் போடுவதால் மட்டும் கேமை நிறுத்திவிட்டுச் செல்வான். தூக்கமே இல்லாமல், சரியாகச் சாப்பிடவும் செய்யாமல் உடல்நலக்குறைவு ஏற்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
மூளைக்குச் செல்லும் ரத்தம் தடைப்படுவதால் உடலுறுப்புகளின் செயல்பாடு பாதிக்கப்படும். இந்த வகையான பக்கவாதம் பொதுவாக வயதானவர்களையே தாக்கும். ஆனால், தற்போது இளைஞர்களும், பக்கவாதத்தின் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.
நவீன காலத்தில் எல்லாத் தரப்பினரும் செல்போன்களை அதிகமாக உபயோகித்து வருகிறார்கள். இது மனநல, உடல்நலக் குறைபாடுகளை ஏற்படுத்தும். பெற்றோர் தங்களின் குழந்தைகளின் ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் கண்காணித்து, அவர்களுக்கு தேவையான ஓய்வு கிடைக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Also Read
-
🔴Live|மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?