India

பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு : வங்கி ஊழியர்கள் போராட்டம்!

கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத வகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறைந்துள்ள தகவல் நேற்று மாலை வெளியானது. முன்னதாக, பொருளாதார மந்த நிலை அனைத்து உற்பத்தித் தொழில்களையும் கடுமையாக பாதித்து, வேலையின்மை அதிகரித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிப்பதற்காக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 23ம் தேதி சில அறிவிப்புகளை வெளியிட்டார். நேற்று மீண்டும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் அரசு நடவடிக்கையாக, 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படும் என அறிவித்தார்.

நிதி அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மோடி அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்க திட்டமிட்டு ஏதேதோ செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 31) போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது, “ஒரே நேரத்தில் 10 பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து இந்திய வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் இன்று போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

வங்கி ஊழியர்கள் கருப்பு 'பேட்ஜ்' அணிந்து போராட்டத்தில் ஈடுபடுவர். சென்னை பிராட்வேயில் உள்ள யூனியன் பாங்க் ஆப் இந்தியா முன் போராட்டம் நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.