India
கேரளாவை உலுக்கிய ஆணவப் படுகொலை : சகோதரன் உட்பட கொலையாளிகள் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
கேரளாவைச் சேர்ந்த கெவின் பி.ஜோசப் கடந்த ஆண்டு ஆணவப் படுகொலை செய்யப்பட்டது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆணவப் கொலையில் சம்பந்தப்பட்ட 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் கெவின் பி.ஜோசப். தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஆதிக்க சாதி கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த நீனு சாக்கோ என்பவரும் காதலித்து வந்தனர்.
இருவரின் குடும்பத்தினரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். திருமண பதிவிற்கான கூட்டு விண்ணப்பத்தை கோட்டயத்தில் உள்ள துணை பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்திருந்தனர்.
இதற்கு நீனுவின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். நீனுன் உறவினர்கள் சிலர் திடீரென கெவின் வீட்டிற்குச் சென்று வீட்டை சூறையாடினர். பின்னர் கெவினையும், அவரது நண்பர் அனிஷையும் கடத்தி சென்றனர். அனிஷை பலமாகத் தாக்கி பாதி வழியில் காரிலிருந்து இறக்கிவிட்டு, கெவினை மட்டும் கடத்தி சென்றனர்.
இதையடுத்து, கெவினின் உடல் மே 28 அன்று கொல்லம் மாவட்டத்தில் ஒரு ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது. அவர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது. இச்சம்பவம் கேரளாவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த கொலை வழக்கு கோட்டயம் நகராட்சி அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், இந்த கொலையில் தொடர்புடைய நீனுவின் சகோதரர் உட்பட 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு குற்றவாளிக்கும் ரூபாய் 40,000 அபராதமும் விதிக்கப்பட்டது. நீனுவின் தந்தை சாக்கோ ஜான் உள்ளிட்ட நால்வர் விடுவிக்கப்பட்டனர்.
இந்தத் தீர்ப்பு குறித்து, ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கெவினின் அப்பா ஜோசப் கூறுகையில் “இதனால் நான் மகிழ்ந்தேனா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவர்கள் செய்த குற்றத்திற்கு சரியான தண்டனை கிடைத்திருக்கிறது. நீனுவின் அப்பா சாக்கோவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டியவர் தான்” என்று கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!