India

ஜியோ இலவச அறிவிப்புகளால் சிக்கலில் ஏர்டெல் : விரைவில் வெளியாக இருக்கும் அதிரடி ஆஃபர் என்ன ?

தொலைத்தொடர்பு சேவையில் ஜியோ கால்பதித்தது நாள் முதல், பிற டெலிகாம் நிறுவனங்கள் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதனால் ஏர்டெல், வோடஃபோன் போன்ற செல்போன் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் தனது வாடிக்கையாளர்களுக்கு எக்கச்சக்கமாக ஆஃபர்களை அள்ளிக்கொடுத்தது ஜியோ நிறுவனம்.

இதனையடுத்து, பிராட்பேண்ட் சந்தையிலும் நுழைந்த ஜியோ நிறுவனம், ஜியோ ஜிகா ஃபைபர் என்ற சேவையை வருகிற செப்.,5ம் தேதி முதல் தொடங்க இருப்பதாக முகேஷ் அம்பானி சமீபத்தில் அறிவித்திருந்தார். கூடவே, ஆண்டு சந்தாவை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இலவச 4K மற்றும் 4K செட்-டாப் பாக்ஸ் வழங்கப்படும் என பல்வேறு அறிமுகச் சலுகைகளை அறிவித்தார்.

இந்த நிலையில் ஜியோவின் ஜிகா ஃபைபர் சேவைக்கு போட்டியாக ஏர்டெலும் கையிலெடுத்துள்ளது. அதில், ஆண்ட்ராய்டுடன் கூடிய செட் டாப் பாக்ஸை அறிமுகப்படுத்த ஏர்டெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ப்ரீமியம் கட்டணங்களின் கீழ், செயல்படுத்தும் வகையில் ஆந்திரா, மத்திய பிரதேசம், சண்டிகர் ஆகிய மாநிலங்களை சோதனை முயற்சியிலும் ஏர்டெல் ஈடுபட்டு வருகிறது என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், வாடிக்கையாளர்களை அதிகரிப்பதற்காக பிராட்பேண்ட், டிடிஎச், போஸ்ட் பெயிட் மொபைல் கனெக்‌ஷன் ஆகியவற்றை ஒன்றிணைத்து, புதிய பில்லிங் முயற்சியையும் மேற்கொண்டு வருகிறது. ஜியோவுக்கு போட்டியாக சுப்ரீம் ப்ரீமியம் சேவையில் ஆண்ட்ராய்டு செட்டாப் பாக்ஸுடன் எச்டி/எல்இடி டிவியை வழங்க ஏர்டெல் திட்டமிட்டுள்ளது.

இந்த செட் டாப் பாக்ஸ் மூலம் கேமிங், ஆன்லைன் ஸ்ட்ரீமிங், எச்டி சேனல்கள், VR செயலிகள் போன்ற வசதிகளை கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெலின் இந்த செட்டாப் பாக்ஸ் வழங்கும் திட்டம், ஜியோ ஜிகா ஃபைபர் தொடங்கவிருக்கும் செப்டம்பர் மாதத்திலேயே சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விலை மற்றும் தேதி தொடர்பாக விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.