India

காதணிகளை கேரள மழை நிவாரணப் பணிக்காக கழட்டிக் கொடுத்த சிறுமி : பினராயி விஜயன் நெகிழ்ச்சி !

கேரளாவில் பெய்த கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகள் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருப்பதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

கேரள மக்கள் படும் வேதனைகளை அறிந்து அம்மக்களுக்கு அண்டை மாநிலத்தில் உள்ள பலர் உதவிகள் செய்து வருகிறார்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவிற்கு உதவிகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், வெள்ள நிவாரணத்திற்கு சிறுமி ஒருவர் செய்த உதவி குறித்து, நெகிழ்ச்சி அடைந்த அம்மாநில முதல்வர் பினராயி விஜயனின் முகநூல் பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

அந்த பதிவில் “தோழர் லாரன்ஸின் 90-வது பிறந்தநாள் விழா நிகழ்வை முடித்துவிட்டு, நான் வாகனத்தில் ஏறி புறப்படும்போது ஒரு சிறுமி சிறிய பையை கையில் வைத்துக் கொண்டு என்னிடத்தில் ஓடிவந்தார். வெள்ள நிவாரண நிதியாக தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை அளிப்பதற்கு இவ்வளவு நேரம் காத்திருந்தேன். இந்தத் தொகையை வெள்ள நிவாரண நிதிக்காக வழங்குகிறேன், பெற்றுக்கொள்ளுங்கள் எனக் கூறினார்.

நானும் மகிழ்வுடன் அதைப் பெற்றுக்கொண்ட சிறிது நேரத்தில் ‘நில்லுங்கள்... நில்லுங்கள்’ என்று கூறி தனது இரண்டு காதுகளிலும் இருந்த காதணியை கழட்டி என்னிடம் கொடுத்தார். அவரின் இந்த செயல் என்னை ஆச்சரியப்படுத்தியது. நான்காம் வகுப்பு சிறுமி லியோனா தேஜாஸ் அன்பின் சிறந்த உதாரணத்தை எங்களுக்குக் காட்டினார்.

நீங்கள் லியானாவை எவ்வளவு பாராட்டினாலும் சரி. லியானாவைப் போன்ற சில குழந்தைகளின் செயலைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. இவரைப் போன்ற சிறுவர்களைப் பார்ப்பது மிகவும் பெருமையாக உள்ளது. இவர்கள்தான் புதிய கேரளாவின் பொக்கிஷங்கள்” என அதில் தெரிவித்துள்ளார்.

விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வர் பினராயி விஜயன் வரும் செய்தியை அறிந்த லியானா தேஜுஸ் என்ற சிறுமி, தன்னையும் அங்கு அழைத்துச்செல்லும்படி தந்தையிடம் கேட்டு, தான் சேர்த்துவைத்திருந்த பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அவரது தந்தைக் கூறியதாவது, “லியானா கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போதே உதவி செய்ய முன்வந்தார். அப்போதிருந்து சிறு சிறு தொகையாக சேர்த்து வைத்து வந்தார். இந்தாண்டு வெள்ளம் ஏற்பட்ட போது இதனை வழங்கவேண்டும் என முடிவு எடுத்திருந்தாள். அந்த சமயத்தில் முதல்வர் விழா ஒன்றிற்கு வருவதனை அறிந்து, தன்னை அங்கு அழைத்து செல்லும் படி என்னிடம் கேட்டாள்.

அழைத்துச் செல்ல சம்மதித்ததும், லியானா சேர்த்து வைத்த பணத்தை எடுத்துக்கொண்டு இருவரும் எர்ணாகுளம் வந்தடைந்து முதல்வர் பங்கேற்கும் விழாவில் கலந்துக் கொண்டோம். முதல்வர் நிகழ்ச்சி முடிந்து புறப்படத் தயாரான போது லியானா, அங்கு ஓடி அவரிடம் பேசினார்.

பின்பு சேர்த்து வைத்திருந்த பணத்தை வழங்கிய அவர், திடீரென என்ன யோசித்தார் என்று தெரியவில்லை. காதில் இருந்த இரண்டு கம்மலை கழட்டி அவரிடம் கொடுத்தார். இதனை நானே எதிர்பார்க்கவில்லை. மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அவரை பினராயி விஜயன் பாராட்டியதற்கு நன்றி” என அவரின் தந்தை தெரிவித்துள்ளார்.