India

மாடல் அழகியைக் கொன்றது ஏன்? : ஓட்டுநரின் அதிர்ச்சி வாக்குமூலம்!

கார் ஓட்டுநரால் மாடல் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வழக்கில் கொலையாளியை தற்போது போலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் குற்றவாளி அளித்துள்ள வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு விமான நிலையம் செல்லும் வழியில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி ஒரு பெண்ணின் சடலம் கிடந்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலிஸாரிடம் தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் எந்தத் தடயமும் இல்லாததால் போலிஸார் குற்றவாளியை பிடிப்பத்தில் சிரமம் ஏற்பட்டது.

மேலும், காணாமல் போனவர்களின் பட்டியலிலும் பெண் குறித்த எந்தத் தகவலும் இல்லை என்பதனால் பிற மாநில போலிஸாருக்கு இதுகுறித்து தகவல் கொடுத்தனர். அப்போது கிடைத்த தகவலின்படி கொலை செய்யப்பட்டவர் கொல்கத்தாவைச் சேர்ந்த பூஜா சிங் என்பது தெரியவந்தது. பூஜா சிங் மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார். மேலும் பணி காரணமாக பெங்களூரு நகருக்கு கடந்த ஜூலை 30ம் தேதி வந்துள்ளார்.

பூஜா சிங்

இதனையடுத்து விமான நிலையத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் வீடியோ காட்சியை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அந்த விசாரணையில் ஓலா கார் ஒட்டுநர் மீது சந்தேகம் ஏற்பட்டு போலிஸார் அந்த கார் ஓட்டுநர் குறித்த தகவலை கார் நிறுவனத்திடம் பெற்று ஓட்டுநர் நாகேஷ் என்பவரைக் கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலிஸார் சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலிஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது, “பூஜா கடந்த 30ம் தேதி பெங்களூரூ வந்துள்ளார். அவர் அன்று மாலை கிரெஸன்ட் சாலையில் இருக்கும் தனியார் விடுதியில் தங்கியுள்ளார். விமான நிலையத்தில் இருந்து விடுதிக்குச் செல்ல ஓலா கேப் புக் செய்து பயணித்துள்ளார். அப்போது ஓட்டுநர் நாகேஷ் அவரை விடுதியில் விட்டுச் சென்றுள்ளார்.

அன்று காலை 4 மணிக்கே பூஜாவிற்கு கொல்கத்தா செல்ல விமானம் இருந்ததால், அதே கார் ஓட்டுநர் நாகேஷுக்கு செல்போன் மூலம் அழைத்து, இன்று அதிகாலை 4 மணிக்கு விமானம் உள்ளதால், விமான நிலையத்தில் விட்டுவிடும்படி கேட்டுக்கொண்டார். இதற்குச் சம்மதித்த நாகேஷ், அதிகாலை 4.15 மணிக்கு ஓசூர் சாலையில் இருந்து விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

நாகேஷ்

செல்லும் வழியிலேயே வாகனத்தை வேறு பாதைக்கு திருப்பி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குச் சென்று, “உன்னிடம் இருக்கும் பணத்தைக் கொடு” என்று மிரட்டியுள்ளார் ஓட்டுநர் நாகேஷ். இதனால் அச்சமடைந்த பூஜா கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாகேஷ் இரும்பு கம்பியால் பூஜாவின் தலையில் அடித்துள்ளார். மயங்கி விழுந்த பூஜாவின் பையில் சோதனையிட்டு பணத்தைத் தேடியுள்ளார். ஆனால் பையில் குறைவான தொகையும், இரண்டு செல்போன்களுமே இருந்துள்ளது.

அப்போது பூஜாவிற்கு மயக்கம் தெளிந்து மீண்டும் கூச்சலிட்டு, தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியுள்ளார். உயிரோடு விட்டால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதிய நாகேஷ், கத்தியால் குத்தியும் கற்களைக் கொண்டு தாக்கியும் பூஜாவைக் கொலை செய்தார்.

பின்பு சடலத்தை விமான நிலைய சுற்றுச்சுவர் பகுதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். காருக்கு இரண்டு மாதங்கள் இ.எம்.ஐ கட்டாததால், பயணியிடம் பணம் பறிக்க முயற்சி செய்ததாகவும், ஆனால் அது வேறுமாதிரியாக முடிந்துவிட்டதாகவும் நாகேஷ் கூறியதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.