India
“மனித வாழ்க்கை முக்கியமானது; நிலச்சரிவு பகுதிகளில் இனி கட்டுமானங்களை அனுமதிக்கமாட்டேன்” : பினராயி விஜயன்
கேரளாவில் கடந்தாண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், கடவுளின் தேசம் ஏகப்பட்ட இன்னல்களைச் சந்தித்தது. அதில் இருந்தே இன்னமும் கேரளா முழுமையாக மீளாத நிலையில் இந்தாண்டும் பெரும் சூழலியல் பிரச்னையை சந்தித்து வருகிறது.
தென்மேற்குப் பருவ மழையால் மாநிலத்தில் பல பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. பெரும் மழையால் சுமார் 150 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருப்பதாகவும், 58 பேர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால், வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க கேரள மக்கள் அண்டை மாநிலங்களுக்கு வேலைகளுக்குச் சென்று வருகின்றனர். மத்திய பா.ஜ.க அரசு கேரளாவிற்கு எந்த வித உதவிகளையும் செய்ய முன்வரவில்லை.
இதனால், அம்மாநில முதல்வரே முன் நின்று நிதி திரட்டும் பணியை மேற்கொண்டார். தமிழகத்தில் இருந்து ஏராளமான நிவாரணப் பொருட்களும், நிதி உதவியும் சென்றது. தற்போது வெள்ளம் வடிந்து மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை நோக்கி நகரத்தொடங்கியுள்ளார்கள்.
இந்நிலையில் வெள்ளத்தின் போது கேரள அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், நிவாரண பணிகள் குறித்தும் முதல்வர் பினராயி விஜயன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, “இந்த உலகில் எல்லாவற்றையும் விட மனித வாழ்க்கை முக்கியமானது.
வெள்ளத்தின் போது நம் மாநிலத்தின் மக்கள் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்துள்ளார்கள். நம்மால் உதவிகள் செய்ய முடியாமல் அப்போது வேடிக்கை மட்டுமே பார்க்கமுடிந்தது. புதைந்தவர்களை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நீர் வழித்தடங்களையும், நீர் நிலைகளையும் வழிமறித்து கட்டிடங்கள் கட்டியதன் விளைவாகத் தான் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நீர் வழித்தடத்தை தடுத்ததனால் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்துள்ளது. எனவே நீர் நிலைகளைப் பாதுகாப்பத்தில் கவனம் செலுத்தவேண்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும், “கடந்தாண்டு பெய்த மழையினால் அணைகளை திறந்து விட்டோம். அப்போது தண்ணீர் ஊருக்குள் வந்தது. ஆனால் இந்தாண்டு எந்த அணையையும் திறக்காமலேயே பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
மண் அரிப்பு மற்றும் நிலச்சரிவுகள் நமது மாநிலத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலைமை எதிர்காலங்களில் ஏற்படாமல் தவிர்க்க நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் இனிமேல் எந்தக் கட்டடமும் கட்டக்கூடாது.
நிலச்சரிவில் தங்கள் வீட்டை இழந்து தற்போது முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு விரைவில் அரசு சார்பில் தற்காலிக வீடு அமைத்துத் தரப்படும். மேலும், வேறு ஓர் இடத்தில் அரசு செலவில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும். இதனை செயல்படுத்த பல்வேறு மாவட்ட கலெக்டர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
முகாம்களில் வாழும் அனைத்து குடும்பத்துக்கும் உடனடி நிவாரணமாக ரூ,10,000 ரூபாய் நிவாரணத் தொகையை அரசாங்கம் வழங்கும். அந்த தொகை செப்டம்பர் 7ம் தேதிக்கு முன்னர் அந்தந்த வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும்.” என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். முதல்வர் பினராயி விஜயனின் இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!