India

“கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத நிதி நெருக்கடி” : நிதி ஆயோக் துணைத் தலைவர் அச்சம்!

இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.கவினர் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி அச்சம் இல்லை எனப் புரட்டுகளைப் பரப்பி வரும் நிலையில் நிதி ஆயோக்கின் துணைத் தலைவரே இப்படித் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் பொருளாதார சரிவு குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார் நிதி ஆயோக் அமைப்பின் தலைவர் ராஜிவ் குமார். அதில், “கடந்த 70 ஆண்டுகளில் நிதித்துறை இதுபோன்ற சறுக்கலைக் கண்டதில்லை. ஒட்டுமொத்த நிதித்துறையும் நெருக்கடியில் உள்ளது.

பொருளாதார நிலை இன்னும் மோசமடைய வாய்ப்புள்ளது. அரசு உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சியில் நாடு எதிர்கொண்டிருக்கும் மோசமான நிலையைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

யாரும் யார் மீதும் நம்பிக்கை கொள்ளமுடியாத நிலை உள்ளது. அரசுத் துறைகள் மட்டுமல்லாமல், தனியார் துறைகளும் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. தனியார் துறையின் அச்சத்தை அகற்ற மத்திய அரசு தன்னால் முடிந்ததைச் செய்யவேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.8 சதவீதமாக இருந்தது. மார்ச் 31ல் நிறைவடைந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.8 சதவீதம் அதிகரித்தது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.7 சதவீதம் சரிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளும், நடவடிக்கைகளும் ஏற்படுத்திய குறைவான முதலீடுகள், குறைவான உற்பத்தி ஆகியவையே இத்தகைய பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது.