India
இந்தியாவில் பொருளாதார சிக்கலே இல்லையாம் : ஒரே போடாகப் போட்ட நிர்மலா சீதாராமன்!
இந்திய பொருளாதாரம் தேக்க நிலையைச் சந்தித்திருப்பதாக பொருளாதார அறிஞர்கள் தெரிவித்திருக்கும் நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்து விளக்கமளித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அப்போது அவர் தெரிவித்த முக்கிய விஷயங்களாவன : அமெரிக்க, சீன வர்த்தக யுத்தத்தால் உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் மந்தமான சூழல் நிலவுகிறது. இந்தியா போன்ற வளரும் நாட்டில் மட்டும் இந்த பொருளாதாரச் சிக்கல் இல்லை. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதார நிலவரம் சிறப்பாக உள்ளது.
உலக பொருளாதார வளர்ச்சி 3.2% என்ற அளவில் சரிவை கண்டுள்ளது. உலகளவில் மந்தநிலை காணப்பட்டாலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்தே வருகிறது. இந்தியாவின் பொருளாதார நிலைமை குறித்து விரிவாக ஆலோசித்து முடிவை எட்டியிருக்கிறோம்.
வரும் அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து வரி தொடர்பாக கொடுக்கப்படும் அனைத்து நோட்டீஸ்கள் மீதும், பதில் வந்த மூன்றே மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த 2014ல் இருந்து சீர்திருத்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். மத்திய அரசின் முதன்மைப் பணியாக அதுவே உள்ளது, ஜி.எஸ்.டி-யில் உள்ள சிக்கல்கள் களையப்பட்டு இன்னும் எளிமையாக்கப்படும்.
வங்கிகளில் ஒருமுறைக்கு மேல் ஆதாரை கொண்டு வருமாறு வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. வாங்கிய கடனை ஒரே தவணையில் திருப்பிச் செலுத்த வழிவகை செய்யப்படும். அதற்காக கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படாது.
ரெப்போ ரேட் விகிதத்திற்கு ஏற்ப மாதத்தவணை கடன்களுக்கான வட்டி விகித்தத்தை வங்கிகளே நிர்ணயிக்கலாம். வட்டி விகிதங்களை வங்கிகளே மாற்றியமைப்பதால், வீட்டுக்கடன், வாகன கடன்களின் வட்டி குறையும். 2020 மார்ச் 31க்கு முன் வாங்கப்படும் பி.எஸ்-4 வாகனங்கள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படும் என்பன உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்தியாவில் பொருளாதாரச் சிக்கல் இல்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தாலும், தொழில் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்தது, நஷ்டத்தைச் சந்தித்து வரும் துறைகள், இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பங்குச் சந்தை சரிவு ஆகியவை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
இதனால், பொருளாதார அறிஞர்கள் ஒப்புக்கொண்ட பிறகும் பொருளாதார தேக்க நிலையை மூடிமறைக்கவே நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். பா.ஜ.க அரசு பொருளாதார நெருக்கடி நிலையை வெவ்வேறு பிரச்னைகளை பூதாகரமாகக் கிளப்பிவிட்டு திசைதிருப்ப நினைப்பதாகவும் பலரும் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?