India

“ப.சிதம்பரம் கூறும் உண்மைகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வேட்டையாடத் துடிப்பதா?” : பிரியங்கா கண்டனம்!

ப.சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் நிதியை பெறுவதற்கு அனுமதி வழங்கியதில் ரூ. 305 கோடி நிதி மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து ப.சிதம்பரம் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும், முறைகேடு நடந்தது தொடர்பாக சிபிஐ-யும் வழக்குப் பதிவு செய்தன.

இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுனில்கவுர் நேற்று ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்படுவதாகத் தீர்ப்பளித்தார். இதனைத் தொடர்ந்து ப.சிதம்பரம் இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர்.

அவர் அங்கு இல்லாததைத் தொடர்ந்து மீண்டும் நேற்று இரவு 11.30 மணிக்கு வந்த சி.பி.ஐ அதிகாரிகள், அடுத்த இரண்டு மணி நேரத்தில் ப.சிதம்பரம், சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் ஒட்டிவிட்டுச் சென்றனர். இன்று காலை மீண்டும், டெல்லியில் உள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர்.

இந்நிலையில் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் முயற்சித்து வருவது பற்றி காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “அதீத தகுதியுடைய, மதிப்பிற்குரிய ராஜ்யசபா உறுப்பினரான ப.சிதம்பரம், நிதியமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டிற்காக நேர்மையுடன் பணியாற்றி உள்ளார். எந்த வித அச்சமுமின்றி மத்திய அரசின் தோல்விகள் பற்றிய உண்மைகளைப் பேசி வருகிறார்.

அவர் கூறும் உண்மைகளை ஏற்க முடியாமல் அவரை வேட்டையாடத் துடிப்பது வெட்கக் கேடானது. நாங்கள் அவருக்காகத் துணை நிற்போம். உண்மைக்காக தொடர்ந்து போராடுவோம். அவரை ஆதரிப்பதற்காக என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.