India

கலவர வழக்கில் குற்றம்சாட்டபட்ட நபருக்கு அமைச்சர் பதவி வழங்கிய உ.பி முதல்வர் யோகி ஆதித்ய நாத் !

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு 2017ம் ஆண்டு முதல் ஆட்சி புரிந்து வருகிறது. இந்நிலையில் உடல் நிலையை காரணம் காட்டி அம்மாநில நிதியமைச்சரும் முன்னாள் பா.ஜ.க தலைவருமான ராஜேஷ் அகர்வால்(76) ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து அமைச்சரவையை விரிவாக்கம் செய்த யோகி ஆதித்யநாத், சுரேஷ் ராணா மற்றும் ஸ்ரீராம் சௌகான் ஆகிய இரண்டு பேருக்கு பதவி அளித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் ஆளுநர் ஆனந்தி பெண் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், முசாபர்நகர் கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எம்.எல்.ஏ சுரேஷ் ராணாவிற்கு அமைச்சர் பதவி வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பலரும் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.

உத்தர பிரதேசத்தில் உள்ள ஷாமிலி மற்றும் முசாபர்நகர் மாவட்டங்களில் 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜாட் மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. ஆகஸ்ட் 27ம் தேதி கவால் கிராமத்தில் சச்சின், கவுரவ் ஆகிய இளைஞர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கலவரம் மூண்டது.

இதில் 62 பேர் உயிரிழந்தனர். 93 பேர் காயமடைந்தனர். 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வேறு இடத்திற்குச் சென்று குடியேறினர். இந்தக் கலவரம் தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவர்களில் பலர் பா.ஜ.க-வை சேர்ந்தவர்கள். இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தானா பவன் தொகுதி எம்.எல்.ஏ சுரேஷ் ராணாவிற்கு தான் தற்போது அமைச்சர்ட் பதவி வழங்கப்பட்டுள்ளது. பல பேரின் மரணத்திற்கு காரணமான சுரேஷ் ராணாவிற்கு அமைச்சர் பதவி வழங்கியிருப்பது மக்களிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.