India
“இதுதான் காஷ்மீரில் இயல்புநிலை திரும்புதலா?” : ப.சிதம்பரம் கேள்வி!
காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 5-ம் தேதி ரத்து செய்த பா.ஜ.க அரசு, அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
இதனால் காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் ஏற்படலாம் என்ற நிலை ஏற்பட்டதால் அங்கு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. காஷ்மீர் மாநிலத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தொலை தொடர்பு மற்றும் இணையதள சேவைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டன. ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்ட 400 முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
காஷ்மீரை இயல்புநிலைக்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு முன்னதாக போராட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கையாக, காஷ்மீரைச் சேர்ந்த 4 ஆயிரம் பேர், பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நேற்று வரை கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காஷ்மீரில் அமைதி நிலவி வருவதாக பா.ஜ.க-வினர் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டாலும், மாணவர்கள் யாரும் பள்ளிகளுக்குச் செல்ல இயலாத பதட்டமான சூழலே நிலவுகிறது.
இதுகுறித்து, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, “ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் இல்லை; ஆனால், இயல்பு நிலை திரும்பியதாகக் கூறுகிறார்கள்.
மெகபூபா முஃப்தியின் மகள் வீட்டுக்காவலில் உள்ளார்; ஏன் என்று கேட்டால் இதுவரை பதிலில்லை. இணைய சேவை முடக்கம் தொடர்கிறது; வீட்டுக்காவல் நடவடிக்கை தொடர்கிறது; ஆனால், இயல்பு நிலை திரும்பியதாகக் கூறுகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!